புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை சம்பவம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலத்தை பதிவுசெய்யுமாறு, குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதவான் மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இன்று மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, நீதவான் ஏ.எம்.எம்.றியால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இன்றயை வழக்கு விசாரணையின் போது, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக நால்வரிடம் பெற்றுக்கொண்ட வாக்கு மூலங்களை குற்றப் புலனாய்வு சார்பாக முன்னிலையான அரச சட்டத்தரணி மன்றில் சமர்பித்தார்.
இதற்கிடையில் குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யுமாறும், ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், வாக்குமூலம் பதிவு செய்யப்படாத காரணத்தினால், மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலம் பதிவு செய்து மன்றில் சமர்பிக்க வேண்டும் என நீதவான் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், நான்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமகன் ஒருவர் உள்ளடங்களாக ஐந்து பேரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறும் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், காவல்துறை அதிகாரியான ஸ்ரீகஜன் கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்திற்கு சென்றமை தொடர்பாக கண்காணிப்பு புகைப்படக் காட்சிப் பதிவினை பெற்று மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, வித்யா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகத்துக்குரியவருக்கு ஆதரவு வழங்கினார் என குற்றம் சும்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட சிரேஸ்;ட பிரதிகாவல்துறை அதிபர் லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதிவரை நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

