கிண்ணியா வலயத்துக்கு உட்பட்ட காக்காமுனை தி /கிண்/தாருல் உலூம் மகா வித்தியாலய பாடசாலை அதிபரை அப்பாடசாலை ஆசிரியர் தாறுமாறாக தாக்கிய சம்பவத்தை கண்டித்து இன்று (22) காலை மாணவர்கள் , பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
நேற்று (21) திகதி பகல் 12.30 மணியளவில் பாடசாலை நேரத்தில் பாடசாலை அதிபரை ஆசிரியர் ஒருவர் தாறுமாறாக பாடசாலை தளபாடத்தினால் தாக்கி இருந்தார்.
அச்சமயம் பாடசாலை தளபாடங்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்ததைக் கண்டித்து அதிபரை தாக்கிய ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி பாடசாலை மாணவர்கள் , பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் பாடசாலை நடைபெறவிடாமல் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
இதற்கு ஒரு தீர்வு பெற வேண்டும் இவ்வாறு ஒரு சம்பவம் இனிமேலும் நடை பெறக் கூடாது அறிவையும், ஒழுக்கத்தையும் புகட்டும் ஆசிரியர்கள் இவ்வாறான செயலை செய்வது இழிவான செயல் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு எந்த உயர் அதிகாரிகளும் வாராததையிட்டு அவ்விடத்திலிருந்து 800 மீற்றர் தூரத்தில் உள்ள பிரதான வீதிக்கு சென்று வீதியை மறித்து வாகனங்களை வீதியினூடாக செல்லவிடாமல் முன்னெடுத்தார்கள்.
அதே வேளை சம்பவ இடத்துக்கு கிண்ணியா பொலிஸ் நிலைய பொலிஸார் சமுகமளித்து ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டார்கள் கட்டுப்படுத்த முடியாமல் உயர் அதிகாரிகளுக்கு இதனை தெரிவித்தார்கள்.
அதனை தொடர்ந்து கிண்ணியா வலய கல்விப் பணிப்பாளர் சம்பவ இடத்துக்கு வந்து பிரச்சினையை பழைய மாணவர்கள் , பெற்றோர்களிடம் கேட்டறிந்து அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு தெரிவித்தார் இதற்கு சம்மதத்தினை தெரிவித்து இதற்கு அமைவாக ஆர்ப்பாட்டகாரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

