ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும், சிவலோகநாதன் வித்தியா பாலியல் வல்லுறவு படுகொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் தப்பிச் சென்றமை தொடர்பான வழக்கில் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் மாதம் 04ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நேற்றைய வழக்கு விசாரணையின் போது சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் காவற்துறை உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக நால்வரிடம் பெற்றுக்கொண்ட வாக்கு மூலத்தை குற்றப்புலனாய்வு சார்பாக மன்றில் முன்னிலையான அரச சட்டவாதி மன்றில் சமர்பித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளடங்களாக ஆறு பேரிடமும் வாக்கு மூலங்களை பதிவு செய்து எதிர்வரும் வழக்கு தவணைக்கு மன்றில் சமர்பிக்க வேண்டும் எனவும், அவற்றை பரிசிலித்து மன்றானது நடவடிக்கைகள் எடுக்குமெனவும், சிறிகஜன் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சென்றமை தொடர்பாக கண்காணிப்பு கெமரா காணொளி பதிவினை பெற்று மன்றுக்கு சமர்பிக்குமாறும் மன்றானது கட்டளை பிறப்பித்திருந்தது.
அத்துடன் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் லலித்யசிங்கவை எதிர்வரும் மாதம் 04ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டிருந்தார்.
மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மூவரடங்கிய நீதவான் குழு முன்னிலையில் பெற்றுக்கொடுக்கப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் , குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் சந்தேகநபரான சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

