ஐக்கிய அமெரிக்காவிற்கு திருகோணமலையில் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக உள்ளது. புதிய கடற்படை தளபதி டிரவிஸ் சின்னையாவும் அந்நாட்டில் பணியாற்றியவர்.
எனவே அவர் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கடற்படை தளபதியின் இனம் தொடர்பில் எமக்கு பிரச்சினைகள் எதுவும் இல்லை. கடற்படை என்று வருகின்ற போது அவரின் இனத்தை முக்கியமாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
அதேநேரம் மேற்குறிப்பிட்ட அதிகாரி யுத்தகாலத்தின் பின்னர் கடற்படையிலிருந்து சட்டபூர்வமாகவே விலகிச் சென்றவர்.
அதன் பின்னர் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான தூதரகத்தில் 4 வருடங்கள் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றினார். அதனால் அவருக்கு ஐக்கிய நாடுகளின் அரச திணைக்களத்தினால் தான் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் 2015 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னர் கடந்த அரசாங்கத்தினால் அரசியல் பழிவாங்கலுக்கு ஆளானதாக கூறி கடற்படையிலிருந்து விலகிச் சென்றிருந்த நிலையிலேயே இவர் தற்போது மீண்டும் கடற்படை தளபதியாக நல்லாட்சி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் அவர் நல்லாட்சி அரசாங்கத்தினால் மீண்டும் கடற்படைக்கு அழைக்கப்பட்ட போது கிழக்கு மாகாணத்திற்கான கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். அதிலிருந்த தற்போது கடற்படை தளபதியாக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
அவ்வாறிருக்கின்ற போது ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரகத்தில் பணியாற்றிய ஒருவர் இலங்கையின் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்று கூற முடியாது. அதனால் நாட்டுப்பற்றுள்ள மக்கள் இது குறித்து அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

