கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இருந்து மனோ கணேசன் வெளிநடப்பு

377 0
ஜனாதிபதி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று இரவு ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் மற்றும் தேர்தல் முறைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இதன்போது தாம் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக, அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
நேற்றையக் கூட்டத்தின் போது, உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை இந்தமுறை அதிகரிக்க முடியாது என்றும், அடுத்ததடவை அது குறித்து பார்த்துக் கொள்ளலாம் என்றும் பிரதமர் குறிப்பிட்டதாக மனோ கணேசனின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனோ கணேசன், அரசாங்கம் ஏற்கனவே வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமேனும் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் 10 ஆயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை உள்ள நிலையில், நுவரெலியாவில் ஒவ்வொன்றும் 2 லட்சம் பேரைக் கொண்ட இரண்டு பிரதேச சபைகளே இருக்கின்றமை அநீதியானது.
நல்லாட்சியிலும் அது தொடரக்கூடாது என்று மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதற்கு சரியான பதில் வழங்கப்படாத நிலையில், மனோகணேசன் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது நிலைப்பாட்டுக்கு அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த மாத்திரமே ஆதரவு தெரிவித்தாகவும் மனோ கணேசன் தமது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்களான பி.திகாம்பரம், ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a comment