ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கண்ட இடத்தில் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக விதிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவு மற்றும் அவரது வௌிநாட்டுப் பயணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆகியவற்றை விலக்கிக் கொள்ளுமாறு வேண்டிய மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உதயங்க வீரதுங்கவின் சட்டத்தரணிகளால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை பரிசீலித்துப் பார்த்த கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக பிடியாணை இன்றி கைது செய்ய முடியுமான குற்றச்சாட்டுக்களே சுமத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
சந்தேகநபரான அவர், பிடியாணை உத்தரவை மீளப் பெறுமாறோ அல்லது வௌிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறோ கோரிக்கை விடுக்காமல், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ சரணடைய வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
2007, 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உக்ரேனிலிருந்து மிக் போர் விமானங்களை கொள்வனவு செய்த போது அதில் உடந்தையாக செயற்பட்டு முறையற்ற வகையில் நிதி மோசடி செய்தமை தொடர்பில் நிதி மோசடி பிரிவில் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

