கோப்பாய்யில் அமைந்துள்ள இந்திய இராணுவ நினைவுத்தூபிக்கு அஞ்சலி

242 0

இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் தலைமையிலான இராணுவக் குழுவினர் இன்று யாழ்ப்பாணம் சென்றதுடன் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடங்களில் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

1987 – 89ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தபோது இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக குறித்த இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர்.

முதற்கட்டமாக யாழ் பலாலியில் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராணுவத்தின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ், தொடர்ந்து யாழ் கோப்பாய் இராஜ வீதியில் அமைந்துள்ள உயிரிழந்த இந்திய இராணுவத்தினரின் சமாதிக்கும் சென்று மரியாதை செலுத்தியதுடன் மலர் தூவி அஞ்சலி செலுததினார்.

தொடர்ந்து யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் சென்ற குறித்த குழுவினர் கோவில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து யாழ் ஒல்லாந்தர் கோட்டைக்கும் சென்ற இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் அடங்கிய குழுவினர், கோட்டைப் பகுதியை பார்வையிட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை யாழ் மாவட்ட படைகளின் தலைமையகம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment