உணவுகளில் செயற்கை சுவையூட்டிகளை பயன்படுத்துவதால் இலங்கையில் நாளொன்றுக்கு எழுநூறு பேர் வீதம் தொற்றா நோய்க்கு உள்ளாவதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் மருத்துவ கலாநிதி பாலித்த சமன் ஜயக்கொடி தெரிவித்தார்.
செயற்கை சுவையூட்டிகளால் மக்களுக்கு ஏற்படும் சுகாதார பாதிப்பு குறித்து தெளிவு படுத்துவதற்கான ஊடக சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மூலோபாய தொழில் முயற்சி முகாமைத்துவ நிறுவனத்தில் இடம்பெற்றது.
இதன்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இதன்போது அங்கு சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவின் மருத்துவ கலாநிதி பாலித்த சமன் ஜயக்கொடி தெரிவிக்கையில்,
எமது நாட்டில் தடைசெய்யப்பட்ட உணவு சுவையூட்டியான இரசாயனப்பொருள் மறைமுகமான முறையில் உணவுப்பொருட்களில் கலக்கப்படுகின்றது. இதனால் எமது நாட்டில் நாளொன்றுக்கு 700 பேர் வீதம் தொற்றா நோய்க்கு ஆளாகின்றனர்.
குறித்த இரசாயனப்பொருள்களை சுவையை அதிகரிப்பதற்காக உணவு உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்தினாலும் அதனால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக இதனைப் பயன்படுத்துவதால் புற்றுநோய், நரம்பு மண்டலம் செயலிழப்பு, மலட்டுத்தன்மை போன்ற நோய்கள் ஏற்படும். ஆகவே இதனை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.
இதன்போது ஜனாதிபதி ஆலோசகர் அத்துரலிய ரத்ன தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் குறித்த இரசாயனம் தடைசெய்யப்பட்டிருப்பினும் கடந்த வருடத்தில் மாத்திரம் 2200 மெற்றிக தொன் இரசாயனம் இலங்கை வர்த்தக சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
எமது நாட்டில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் க்ளைப்பொசைட் களைநாசினியால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் காரணமாக அண்மையில் அது முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த உணவு சுவையூட்டியை கொண்டு கிருமிநாசினியாக பயன்படுத்துவதற்காகவே இவ்வாறு இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
ஆகவே எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதில் பாரிய சிக்கல் எழுகின்றது. நாட்டு நலனுக்காக சகல தரப்பும் தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் குறித்த இரசாயனப்பொருள் மொனோசோடியம் க்ளுடொமெட் எனும் பெயரில் மறைமுகமாக உணவுகளில் கலக்கப்படுகின்றது. இது தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார திணைக்களம் மேற்கொள்ளவேண்டும்.
குறித்த இரசாயனப்பொருள் பாவனையை எமது நாட்டில் எதிர்வரும் ஒருவருட காலத்துக்குள் முற்றிலும் தடைசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். அத்துடன் மக்களுக்கு விநியோகிக்கப்படும் எத்தகைய உணவுப்பொருள்களாக இருப்பினும் வேறு பெயரை குறிப்பிடாது மக்கள் அறிந்த இரசாயனப்பெயரையே குறிப்பிடுதல் வேண்டும். உணவில் சேர்க்கப்பட்டுள்ள அதன் அளவையும் சுட்டிக்காட்ட வேண்டும். இதற்கான சட்ட நடவடிக்கையை சுகாதார அமைச்சும், நுகர்வோர் அதிகார சபையும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்.

