டொலர் மோசடி – ஐந்து பேர் கைது – இறுதி யுத்த காலத்தில் கிடைத்த டொலர் என தெரிவிப்பு

249 0

அமெரிக்க டொலர் பண மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் அநுராதபுரம் காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், அவர்கள் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த பண மோசடியின் பிரதான சந்தேகத்துக்குரியவர் மிஹிந்தலையைச் சேர்ந்தவர் என்றும், மேலும் இருவர் தலவாக்கலை பிரதேசத்தையும், மற்றுமொருவர் கொழும்பைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேகத்துக்குரியவர்கள், வர்த்தகரிடம் மோசடி செய்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பிரதான சந்தேகத்துக்குரியவரிடமிருந்தும், மேலும் 3 லட்சத்து 43 ஆயிரம் ரூபா ஏனைய சந்தேகத்துக்குரியவரி;களிடமிருந்தும் மீட்கப்பட்டுள்ளது

அத்துடன், குறித்த சந்தேகத்துக்குரியவர்களிடமிருந்து, அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 51 நாணயத் தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், அவர்கள் பயன்படுத்திய 5 கைத்தொலைபேசிகளும், மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரால் கையேற்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகத்துக்குரியவர் வட மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது நண்பரிடம் யுத்தம் இடம்பெற்ற போது கிடைத்த பெருந்தொகையான அமெரிக்க டொலர்கள் இருப்பதாக கூறியதாக குறித்த வர்த்தகர் காவல்துறையில் முறையிட்டுள்ளனார்.

அவற்றை, வங்கியினூடாக ரூபா பெறுமதியில் மாற்றுவதற்கு அவர் அச்சம் கொண்டிருந்தால், அவற்றை குறைந்த விலையில் மாற்றுவதற்கு முயற்சித்ததாகவும் குறித்த வர்த்தகரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிகளின் பேச்சில் நம்பிக்கைகொண்ட வர்த்தகர், 15 லட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை 9 லட்சத்து 55 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனார்.

பின்னர், குறித்த தொகையை வர்த்தகரிடமிருந்து பெற்றுக்கொண்டு டொலரை  கொண்டுவருவதாக தெரிவித்து, அந்த சந்தேகத்துக்குரியவர்கள் சென்றுள்ளனர்.

எனினும், அவர்கள் மீண்டும் திரும்பாமையினால், குறித்த வர்த்தகர் சம்பவம் தொடர்பில் முறையிட்டதையடுத்தே அவர்கள், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment