முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியில் செயற்படும் 42 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமை பெற்றுக் கொள்ள உள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியும் பொது ஏமாற்றுப்போக்குமே இதற்கு பிரதான காரணங்களாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
நல்லாட்சி என்று அழைக்கப்படுகின்ற ரணில் – மைத்திரியின் கூட்டாட்சி தொடர்பில் பொது மக்கள் அதிருப்தியுடன் உள்ளனர். நாட்டிற்கு மாற்று அரசியல் சக்தி ஒன்றின் தேவை அத்தியாவசியமான தேவையாக வெளிப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி செல்ல கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே கூட்டு எதிர் கட்சியில் இருந்து செயற்பட்டோம். ஆனால் தற்போது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியின் தவிசாளராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளார். அந்த கட்சியில் உறுப்புரிமையை பெற்று எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியின் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 42 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைவதற்கு தீரமானித்துள்ளனர்.
மிக விரைவில் இதற்கான அறிவிப்புகள் விடுக்கப்படும். நல்லாட்சி அரசாங்கத்தை பொறுத்த வரையில் ஆட்சி பீடம் ஏறும் முன்னர் வழங்கிய உறுதிமொழிகள் அனைத்தும் புறம்தள்ளப்பட்டுள்ளன. நல்லாட்சியில் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று அனைத்தையும் மறந்து செயற்படுகின்றது. கட்சியின் கொள்கை மற்றும் ஆதரவாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையிலேயே சுதந்திர கட்சி ஆட்சியில் உள்ளது.
மறுபுறம் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு அடிபணிந்தே அரசாங்கத்தில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுடன் தொடர்ந்தும் ஒன்றித்து பயணிக்க இயலாது. எனவே தான் கூட்டு எதிர் கட்சியில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைவதற்கு தீர்மானித்துள்ளோம். இதற்காக எமது பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் அதனை சட்ட ரீதியில் எதிர்கொள்வோம் என்றார்.

