ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் இதுவரையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளடக்கப்படவில்லை. அவ்வாறு செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் அம்மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. தொடர்ந்தும் வடக்கு,கிழக்கு மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கான உண்மையான நேசக்கரத்தை ஐ.நா வழங்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் பிராந்திய குழுவின் கலந்துரையாடல் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி யுனா மெக்கியூலியின் தலைமையில் கைத்தடியில் நேற்று இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சிறப்புரை ஆற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று ஐக்கிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் எம்முடன் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 2018 தொடக்கம் 2022 வரையிலான காலப்பகுதி வரையில் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு கீழ் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பில் நாம் அறிவோம்.
ஐக்கிய நாடுகளினால் அடுத்த வருடம் குறித்த நிகழ்ச்சி நிரல் ஆரம்பிக்கப்படும்போது நாமும் வடமாகாண சபையும் இணைந்திருப்போம். 2013 தொடக்கம் 2017 வரையில் செயற்படுத்ப்பட்ட ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கும் 2018 தொடக்கம் 2022 வரையிலான காலப்பகுதி வரையில் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் உள்ளன.
மஹிந்த சிந்தனையின் இலக்குகளே 2013 தொடக்கம் 2017 வரையில் செயற்படுத்ப்பட்ட ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் பிரதான இடம் வகித்தன. வட மாகாண மக்கள் மஹிந்த சிந்தனையை நிராகரித்தவர்கள் என்ற வகையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு முழுமையான பங்களிப்பு வழங்க முடியாது போனது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அரசாங்கம் மாறுவதற்கு நாமும் பிரதான சக்தியாக செயற்பட்டோம். ஏனெனில் எமது எண்ணங்கள் முழுமையாக அந்த அரசாங்கத்தில் வெளிப்படுத்தப்படவில்லை. குறிப்பாக அப்போது ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதியாக இருந்த சுபினை நந்தி மத்திய அரசாங்கம் சொல்லும் விடயங்களுக்கு அடிப்பணிந்தே செயற்பட்டு வந்தார். ஆனால் தற்போது அவ்வாறில்லை. ஐக்கிய நாடுகள் குடும்பம் இன்று எங்களோடு உள்ளது.
ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதியாக இருந்த சுபினை நந்தயிடம் நாம் பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கூறியிருந்தோம். ஐக்கிய நாடுகளின் இலங்கை மீதான தனித்துவமான செயற்பதிறன் அறிக்கையில் ஐக்கிய நாடுகள் நடுநிலைமையாக செயற்பட்டதா என்பது சந்தேகமானதேயாகும்.
சமாதான மீள்கட்டுமானத்தில் மீள்குடியமர்த்தப்படல், பெண்தலைமை குடும்பங்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை பெற்றுக்கொடுத்தல், குறிப்பாக வன்னியில் வாழும் வரிய மக்களுக்கு குடியிருப்புகளை அமைக்கவும் பொருளாதார ரீதியாகவும் உதவுதல் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்த விரும்புகின்றோம்.
இந்நாடு வருமானம் குறைந்த அந்தஸ்திலிருந்து மத்திய வருமானம் பெறும் நாடாக உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் வட. மாகாணம் அவ்வாறில்லை. தொடர்ந்தும் குறை வருமானம் பெறும் மாகாணமாகவே காணப்படுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தொடர்ந்தும் ஒரு இலட்சத்து ஐம்தாயிரத்தி்ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் எமது பூர்விக நிலங்களையும் அலுவலக கட்டிடங்களையும் இயற்கை வழங்களையும் பாவிக்கின்றனர். குறிப்பாக மீன்பிடி சமூத்தினரிடையே தற்போது அச்சம் கலந்த சூழல் உருவாகியுள்ளது. தெற்கிலிருந்து வரும் மீனவர்கள சட்டத்திற்கு முரணான மீன்பிடி நடவடிக்கைகளை வடக்கில் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் மீள்குடியேற்ற நிகழ்ச்சிதிட்டத்திலும் கூட பல பிரச்சினைகள் தோன்றியிருந்தன. குறிப்பாக வழமைக்கு மாறாக காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லீம்களின் குடியிருப்புகளில் பாதை , குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டன. உங்களது செயற்பாடுகளை குறைகூற வேண்டிய எண்ணம் எனக்கு இல்லை. ஆனாலும் ஐக்கிய நாடுகள் வடக்கு கிழக்கில் வாழும் மக்களுடன் எந்த அளவு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை உணர வேண்டும்.
நாம் அறைநுற்றாண்டுகளுக்கு மேலாக எமது தனித்த அடையாளத்தை இழந்துள்ளோம். எமது மேலான உரிமையையும் அரசாங்கம் பறித்துக்கொண்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்கப்பட்ட மிலேனிய அபிவிருத்தி இலக்குகள் தற்போது 17 நிலையான அபிவிருத்தி இலக்குகளாக மாற்றம் கண்டுள்ளன.
இப்போதே வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும். ஐக்கிய நாடுகளினால் செயற்படுத்தப்பட்ட பல அபிவிருத்தி செயற்பாடுகளில் இடைவெளிகள் காணப்படுகின்றன.அது தொடர்பில் நாம் கலந்துரையாட வேண்டும் என்றார்.

