வெளிவிவகார அமைச்சராக சாலக ரத்நாயக்க?

206 0

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரவி கருணாநாயக்க அமைச்சர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, வெளிவிவகார  அமைச்சராக சாகல ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, சாகல ரத்நாயக்கவின் வசமுள்ள சட்டம் , ஒழுங்கு அமைச்சர் பதவி மீண்டும் திலக் மாரப்பனவிடம் கையளிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2015ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த போது திலக் மாரப்பனவே, சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பதவி வகித்தார். எனினும், அவன்ட் கார்ட்  சர்ச்சையில் சிக்கியதை அடுத்து அவர் பதவி விலகியிருந்தார்.

முன்னதாக, வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு நவீன் திசநாயக்கவின் பெயரும் அடிபட்டது. எனினும், அவர் தன்னிடம் உள்ள பெருந்தோட்டத்துறை அமைச்சர் பதவியை மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக நுவரெலியவில் தங்கியிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கொழும்பு திரும்புகிறார். இதன் பின்னர், புதிய வெளிவிவகார அமைச்சருக்கான பரிந்துரையை, அவர் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மூலமாக சிறிலங்கா அதிபருக்குத் தெரியப்படுத்துவார் என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு திலக் மாரப்பன, கலாநிதி சரத் அமுனுகம ஆகியோரின் பெயர்களும் அரசியல் வட்டாரங்களில் அடிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment