ரவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை தேவை; பதவி ராஜினாமா தண்டனையல்ல

329 0

ரவி கருணாநாயக்க பதவியை இராஜினாமா செய்தமையானது, அவர் செய்த மோசடிகளுக்கு கிடைத்த தண்டனை அல்ல என்றும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

ஊழல் சட்டத்தின் கீழும் நிதி மோசடி சட்டத்தின் கீழும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறுகின்றார்.

இன்று கொழும்பிலுள்ள அந்தக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றும் போது,

எவராவது ஒருவர் தவறிழைக்கும் போது அவர் அணிந்திருந்த ஆடையை கழற்றி விட்டு வேறு ஒரு ஆடையை அணிந்து கொண்டவுடன் அவர் குற்றமற்றவராக மாறிவிடுவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

மோசடிகளில் பங்கெடுத்துக் கொண்ட போது நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, வௌிவிவகார அமைச்சராக மாறியவுடன் குற்றமற்றவராக மாறுவதில்லை என்று அவர் குறிப்பிடுகின்றார்.

அவர் மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தும்படியான விடயங்கள், ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் வௌியாகியுள்ளது. இதன் காரணமாக நாம் அரசாங்கத்திடம் கூறுகின்றோம், உடனடியாக அவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு.

அரசாங்கம் கூறுகின்றது ரவி கருணாநாயக்கவை முன்னுதாரணமாக எடுக்குமாறு. நாம் நாட்டு பிள்ளைகளுக்கும், பொது மக்களுக்கும் கூறுகின்றோம் அவரை முன்னுதாரணமாக எடுக்க வேண்டாம் என்று.

களவு செய்துவிட்டு, மக்கள் எதிப்புக்கு மத்தியிலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முயற்சிக்கும் போதும், பதவியை இராஜினாமா செய்வது சிறந்த அரசாங்கத்தின் இலட்சனமல்ல என்று அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

Leave a comment