மெரீனா, எலியட்ஸ் கடற்கரை ரூ. 28 கோடியில் சீரமைப்பு

215 0

மெரீனா, எலியட்ஸ் கடற்கரை ரூ. 28 கோடியில் சுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 100 சி.சி. டி.வி. கேமிராக்கள் பொருத்தப்படுகிறது.

சென்னை மெரீனா கடற்கரை உலகிலேயே மிகவும் நீளமான மணல் பரப்புமிக்க கடற்கரை என்ற பெயரை பெற்றுள்ளது.

சென்னை மாநகர பொதுமக்கள் பொழுது போக்குவதற்கும், காற்று வாங்குவதற்கும், நடைபயிற்சி செய்வதற்கும் இந்த கடற்கரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் இந்த கடற்கரையின் அழகை ரசிக்க தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் மெரீனா கடற்கரையில் பொது மக்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு பணிக்காக 75 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது. குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், குப்பை தொட்டிகள், மருத்துவ முதலுதவிகள், மேற்கூரை இருக்கைகள், மீட்பு படகுகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதேபோல் எலியட்ஸ் கடற்கரையிலும் 26 சி.சி. டி.வி. கேமிராக்கள் பொருத்தப்படுகின்றன. இந்த பணிகளுக்காக ரூ. 28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.சி.சி.டி.வி. கேமிராக்கள் அனைத்தும் தமிழக கடலோர பாதுகாப்பு படை மூலம் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

குளிக்கும் போது கடலில் தவறி விழுந்து மூழ்குவோரை உடனடியாக காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளிக்க சிறப்பு வசதிகள் செய்யப்படுகிறது. கடற்கரை பகுதியில் தடுப்பு கயிறுகள் கட்டப்பட உள்ளது.கடலில் மூழ்கி தவிப்போரை மீட்டு உடனடியாக சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் செய்யப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை மெரீனா, எலியட்ஸ் கடற்கரை பகுதிகளை நவீன முறையில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள், பொது மக்கள் பாதுகாப்புக்காக 100 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் செய்யப்படுகிறது. தமிழக கடலோர பாதுகாப்பு படை கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இதன் மூலம் பொது மக்கள், சுற்றுலா பயணிகள் பெரிதும் பயன்பெறுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment