யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஆறு பேர் உட்பட 7 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸார் இருவர் மீது கடந்த 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஆறு பேர் உட்பட 7 சந்தேகநபர்கள் நேற்று யாழ்ப்பாண நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது குறித்த 7 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அன்றையதினம் அடையாள அணிவகுப்பு நடாத்தவும் யாழ்ப்பாண நீதிமன்ற பதில் நீதவான் உத்தவிட்டுள்ளார்.
ஆவா குழுவின் இரண்டாவது தலைவர் எனத் தெரிவிக்கப்படும் நிசா அல்லது விக்டர் என அழைக்கப்படும் சத்தியவேல் நாதன், வினோத் என்று அழைக்கப்படும் ராஜ்குமார் ஜெயக்குமார், மனோஜ் என்று அழைக்கப்படும் குலேந்திரன் மனோஜித் மற்றும் சிவா ஆகியோர் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இருவர் கைது செய்யபட்டதுடன் அவர்களிடமிருந்து இரு வாள்களும் மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆவா குழுவின் மற்றுமொரு உறுப்பினர், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பகுதியில் அவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

