காஷ்மீருக்குள் நாங்கள் நுழைந்தால் என்ன செய்வீர்கள்?: இந்தியாவுக்கு சீனா கேள்வி

3537 84

காஷ்மீருக்குள் சீன ராணுவம் நுழைந்தால், இந்தியா என்ன செய்யும் என்று சீனா கேள்வி விடுத்துள்ளது. இருதரப்பும் ஒரே நேரத்தில் படைகளை வாபஸ் பெறும் யோசனையை நிராகரித்துள்ளது.

காஷ்மீருக்குள் சீன ராணுவம் நுழைந்தால், இந்தியா என்ன செய்யும் என்று சீனா கேள்வி விடுத்துள்ளது. இருதரப்பும் ஒரே நேரத்தில் படைகளை வாபஸ் பெறும் யோசனையை நிராகரித்துள்ளது. இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பகுதி உள்ளது. அங்கு இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகளை சீன ராணுவம் அழித்தது.

அத்துடன், அத்துமீறி சாலை அமைத்து வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் இந்திய படைகள் குவிக்கப்பட்டன. இதனால், 50 நாட்களாக அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. படைகளை வாபஸ் பெறுமாறு சீனா விடுத்த எச்சரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்திய பத்திரிகையாளர்களுக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை விவகார துணை தலைமை இயக்குனர் வாங் வென்லி நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டோக்லாம் பகுதியில் ஒரே ஒரு இந்திய வீரர், ஒரு நாள் இருந்தால் கூட அது எங்கள் நிலப்பகுதியில் அத்துமீறியதாகவே கருதப்படும். இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இந்தியா முதலில் தனது படைகளை வாபஸ் பெற வேண்டும். இரு நாட்டு படைகளும் ஒரே நேரத்தில் வாபசாகி, அவரவர் ஏற்கனவே இருந்த இடத்துக்கு திரும்ப வேண்டும் என்ற இந்தியாவின் யோசனை ஏற்கத்தக்கது அல்ல. ஏனெனில், இந்திய படைகள்தான், பரஸ்பரம் அங்கீகரிக்கப்பட்ட எல்லைப்பகுதியை கடந்து சீன பகுதிக்குள் நுழைந்துள்ளன. எனவே, வாபஸ் பெற வேண்டிய பொறுப்பு, இந்திய படைகளுக்குத்தான் இருக்கிறது. இந்த விவகாரத்தில், சீனா சுய கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறது.

3 நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் நிலப்பகுதி என்பதால், இந்தியா தனது செயலை நியாயப்படுத்த முயற்சிக்கிறது. அப்படிப் பார்த்தால், இந்தியாவில் கூட 3 நாடுகள் சந்திக்கும் நிலப்பகுதிகள் இருக்கின்றன. இந்தியா, நேபாளம், சீனா ஆகிய 3 நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் காலாபாணி பிராந்தியம் உள்ளது. அந்த இடத்திலோ அல்லது இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சினையாக உள்ள காஷ்மீரிலோ சீன ராணுவம் நுழைந்தால், இந்தியா என்ன செய்யும்?

எனவே, 3 நாடுகள் சந்திக்கும் பகுதி என்பதை சாக்குபோக்காக சொல்வது சரியல்ல. அது மேற்கொண்டு பிரச்சினையை அதிகரிக்கவே செய்யும். சீன ராணுவமாக இருந்தாலும், சீன அரசாக இருந்தாலும், எங்களுக்கென உறுதிப்பாடு உள்ளது. இந்த பிரச்சினையில் தவறான பாதையில் செல்ல இந்தியா முடிவு செய்தால், சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு எந்த காரியத்தையும் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment