இந்தியாவுடன் பேசத் தயார்: பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி அறிவிப்பு

358 0

இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பதன்கோட் விமானப்படை தள தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியும், அவர்களுக்கு எதிராக இந்தியா ஆதாரங்கள் வழங்கியும், அவர்கள் மீது அந்த நாடு நடவடிக்கை எடுக்காததால், இரு நாடுகள் இடையே நடைபெற்று வந்த அமைதி பேச்சுவார்த்தை முடங்கிப்போனது.

இந்த நிலையில், தற்போது பாகிஸ்தானில் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் புதிய பிரதமராக ஷாகித் ககான் அப்பாசி பதவி ஏற்றுள்ளார்.

அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர், “பாகிஸ்தானின் தேசிய நலன்களை சமரசம் செய்துகொள்ளாமல், இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” என கூறி உள்ளதாக ‘ரேடியோ பாகிஸ்தான்’ தெரிவித்துள்ளது.

சமநிலை அடிப்படையில் இந்தியாவுடனும், ஆப்கானிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதை தான் ஆதரிப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.மேலும், “கராச்சியில் அமைதியும், சமாதானமும் நிலவாமல், பாகிஸ்தான் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கட்சியின் ஆதரவு எனக்கு கிடைக்கிற வரையில் நான் பிரதமராக தொடருவேன்” என்றும் அவர் கூறி உள்ளார்.பாகிஸ்தானில் எம்.பி., பதவி தகுதி இழப்புக்கு வழிவகை செய்துள்ள அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 62, 63-ல் மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றால், அது தொடர்பாக பிற அரசியல் கட்சிகளை தொடர்பு கொண்டு விவாதிப்பேன் என்றும் அப்பாசி தெரிவித்துள்ளார்.

Leave a comment