புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் வாக்குமூலம் பெறுவதற்கான அனுமதி சபா நாயகரிடம் கோரியுள்ளதாக அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த ஊர்காவற்துறை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .
வழக்கு விசாரணையின் போது, முன்னாள் சிரேஷட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க இன்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவர் சார்பாக மூன்று சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகி பிணை விண்ணபத்தினை சமர்ப்பித்தனர்.
அதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜராகியிருந்த அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த் கடுமையான ஆட்சேபம் தெரிவித்ததுடன், அதற்கான காரணங்களை பின்வருமாறு தெளிவு படுத்தினார்.
லலித் ஜெயசிங்க பொலிஸ் தர வரிசையில் 4ம் நிலையில் பதவி வகித்தார். அவரைப் பிணையில் செல்ல அனுமதித்தால் சாட்சியங்களிலும், சான்றுகளிலும் அதீத தலையீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த வழக்கு விசாரணைகள் தற்போதும் இடம்பெறுகின்றன. சந்தேகநபர் சார்பில் கடந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு வாக்குமூலங்களை பெற முயன்றுள்ளோம்.
அந்த வகையில் குறித்த வீடியோ காட்சியிலுள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வட பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினதும் வாக்குமூலங்களை பெறுவதற்கான அனுமதியை பாராளுமன்ற சபாநாயகரிடம் கோரியுள்ளோம்.
சபாநாயகரிடமிருந்து அந்த அனுமதி கிடைத்ததும் அவர்களிடம் வாக்குமூலங்கள் பெற இருப்பதுடன் இவ்வழக்கில் மேலும் நான்கு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் சாட்சிகள் சிலரினதும் வாக்குமூலங்களும் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
இதனால் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரிக்கு பிணை வழங்க வேண்டாம் என அரச சட்டவாதி மன்றில் தெரிவித்தார். இதை கவனத்தில் எடுத்த நீதிபதி லலித் ஜெயசிங்கவை எதிர்வரும் 22ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார் . மேலும் இவ்வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களில் ஏதாவது ஒன்று ஊர்காவற்துறை நீதிமன்ற எல்லைக்குள் இடம்பெற்றதா? அந்த குற்றத்துடன் முன்னாள் சிரேஷட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தொடர்பு பட்டுள்ளாரா? அல்லது வேறு யாராவது தொடர்பு பட்டுள்ளனரா? என்பதை விசாரித்து அடுத்த அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

