மாயமான ராணுவ விமானம் குறித்து டெல்லி அதிகாரிகள் சென்னையில் ஆய்வு

287 0

an32_2949130f29 பேருடன் மாயமான ராணுவ விமானம் குறித்து கட்டுப்பாட்டு அறை தகவல்களை பெறுவதற் காக டெல்லி அதிகாரிகள் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.
சென்னை தாம்பரம் விமானப் படைத் தளத்தில் இருந்து அந்த மானுக்கு கடந்த 22ஆம் திகதி ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் 29 பேருடன் புறப்பட்டு சென்றது.
நடுவானில் பறந்தபோது அந்த விமானம் திடீரென மாயமானது.
இந்த விமானத்தை தேடும் பணியில் போர்க்கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.
ஆனால் எதிலுமே நம்பகமான தகவல் கிடைக்கவில்லை.
அதைத்தொடர்ந்து கடலின் மேற்பரப்பில் விமானத்தை தேடும் பணி கடந்த 2ஆம் திகதிதியுடன் நிறுத்தப்பட்டது.
விமானம் கடலுக்கு அடியில் ஆழமான பகுதியில் இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.
எனவே, கடலின் ஆழத்தில் தேடும் திறன் படைத்த கப்பல்களை வைத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
‘நிருபக்’ என்ற கடற்படை கப்பலும், ஒரு நீர்மூழ்கி கப்பலும் கடலுக்கு அடியில் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத் துக்குச் சொந்தமான ‘சாகர்நிதி’, மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறைக்குச் சொந்தமான ‘சமுத்திர ரத்னாகர்’ ஆகிய இரு ஆராய்ச்சிக் கப்பல்களும் மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
4 கப்பல்களும் கடந்த 4 நாட்களாக தேடியும் இதுவரை நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மாயமான விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி, கடைசியாக சென்னை விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு பேசும்போது, காற்று சுழற்சியில் விமானம் சிக்கிக் கொண்டதால், வேறு வழியில் விமானத்தை இயக்க அனுமதி கொடுக்கும்படி கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இந்த தகவல் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாயமான விமானம் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் ராணுவ அதிகாரிகள் நேற்று சென்னை விமான நிலையம் வந்து விசாரணை நடத்தினர்.
இராணுவ அதிகாரிகள், விமானத்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று காலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்து விசாரணை நடத்தினர்.
சம்பவத்தன்று கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர், கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்யப்பட்டு வைத்திருந்த விமானியின் கடைசி கட்ட பேச்சை கேட்டனர்.
அந்த ஆடியோ பதிவை வேறொரு கருவியில் பதிவு செய்து கொண்டு சென்றனர்.
விமானம் மாயமாகி இன்றுடன் 21 நாட்கள் ஆகியும் இன்னும் நம்பகமான தகவல் கிடைக்கவில்லை.