முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தமக்கான அதிகாரத்தை சுதந்திரமாக பயன்படுத்தலாம் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

251 0

வடமாகாண அமைச்சர் சபையை மாற்றம் செய்ய அல்லது திருத்தியமைக்க முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு உள்ள சட்டரீதியான அதிகாரத்தை அவர் சுதந்திரமாக பயன்படுத்தலாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நேற்றைய சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலமையில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இரா.சம்மந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, மற்றும் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலாநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அண்மையில் வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கியமை மற்றும் இரண்டு அமைச்சர்கள் மீது விசாரணை நடத்தப்போவதாக அறிவித்து அவர்களுக்கு கட்டாய விடுமுறை அறிவித்தமையை தொடர்ந்து வடக்கு மாகாண சபையில் பல சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

இதன்போது முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் சம்பந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பின்போது 3 தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கமைய, முதலமைச்சர் தனக்குள்ள சட்டரீதியான தற்துணிவு அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றம் அல்லது திருத்தம் செய்ய அங்கத்துவ கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

பதவி நீக்கப்படும் அமைச்சர்கள் குற்றம் செய்தவர்களாக கருதப்படமாட்டார்கள்.

புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படும்போது அங்கத்துவ கட்சிகளின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என்ற 3 தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தவிர தனிப்பட்ட கருத்து வேறு பாடுகளை மறந்து தமிழ் மக்களின் நலனுக்காக தொடர்ந்து சந்திப்புக்களை நடத்துவதெனவும் தீர்மா னிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும் விரைவில் சந்தித்து பேசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளளார்.

அத்துடன் அமைச்சர் சபையில் மாற்றம் ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அமைச்சர் சபை முழுமையாக மாற்றம் செய்யப்படுமா? அல்லது பகுதியளவில் மாற்றம் செய்யப்படுமா? என்பது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும அமைச்சர் சபையில் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment