புலம்பெயர் நாடுகளில் தமிழீழம் என்னும் சொற்பதத்தை இல்லாதொழிக்க சிறீலங்கா முயற்சி

8188 0

இன்றுவரை சகல நாடுகளிலும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலைக்காகவும் அவர்களின் கலை கலாச்சாரத்தினைக் காப்பதற்காகவும் புலம்பெயர்ந்த தேசங்களில் பிறக்கும் எங்கள் எதிர்காலச் சந்ததியினருக்கு அவற்றைக் கொண்டுசென்று தமிழ்பற்றுடனும் தமிழ்மக்களின் சுவாசமாகிய தமிழீழம் என்கின்ற சுதந்திரத் தமிழீழத்தை அடைவதற்குமான சகல முன்னெடுப்புக்களையும் உலகெங்கும் இருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் மிக வெற்றிகரமாக முன்னெடுத்து வருவது அனைத்து தமிழ்மக்களும் அறிந்த விடயமே.

இதற்கப்பால் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனித்த பின் தமிழீழம் என்கின்ற உயிருள்ள சொல்லை உச்சரிக்கும் மக்களாக, அதற்கான செயற்பாடுகளுக்கு உயிரூட்டும் மக்களாக, உரிமையுள்ள மக்களாக, அதற்காக ஐனநாயகப் போராட்டங்களையும் அதை அழிப்பதற்காக சிறிலங்கா அரசிற்கு தோளோடு தோள் நின்று உதவிய வல்லரசு நாடுகளின் முற்றத்தில் நின்று முன்னெடுக்கும் மக்களாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுமே இருக்கின்றது. தமிழீழத்தில் உள்ள மக்களால் தமிழீழம் என்னும் சொல்லை உச்சரிக்கும் உரிமை சட்டரீதியாக மறுக்கப்பட்ட நிலையில் அந்த மக்கள் திறந்தவெளிச் சிறையில் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் தமிழ்மக்களும் தமிழீழவிடுதலைப் போராளிகளும் எதற்காக தங்கள் இன்னுயிர்களை ஈந்தார்களோ அந்த தமிழீழம் என்னும் உரிமைச் சொல் இன்று புலம்பெயர் நாடுகளிலேயே உரத்துச் சொல்லப்படுகின்றது. அதைவிட போராளிகளின் உயிர்தியாகத்தினாலும் அரிய பெரிய செயற்பாடுகளினாலும் உருவாக்கப்பட்ட தமிழீழத் தேசியக் கொடி இன்று புலம்பெயர் தேசங்களில் ஒரு சுதந்திரதேசத்தின் தேசியக் கொடிகளுக்கு ஒப்பாக புலம்பெயர் கட்டமைப்புக்களால் ஏற்றிவைக்கப்பட்டு புலம்பெயர் தமிழீழமக்கள் அந்தக் கொடிக்கான மரியாதையை மிக உணர்வுடன் வழங்கிவருகின்றார்கள். அந்தத் தேசியக்கொடியினை புலத்தில் பிறந்த இளையோர்கள் தங்கள் உயிரிலும் மேலாக நினைத்து நடப்பது பெருமைக்குரிய விடயமாக அமைந்திருக்கின்றது.

தமிழீழம் என்ற சொற்பதத்தையும், தமிழீழத் தேசியக் கொடியையும், தமிழீழத்தில் மௌனமாக்கிய சிறிலங்கா இனவாத அரசிற்கு இவை இரண்டையும் புலம்பெயர் நாடுகளில் தடுக்கமுடியாமல் போனது. அதற்காக இலங்கையரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெற்றிகரமாக முறியடித்து சிறிலங்கா இனவாத அரசை ஓடஓட விரட்டியடித்தது. இதை ஒரு சவாலாக எடுத்த சிங்களதேசம் தான் ஓர் அரசு என்ற அங்கீகாரத்தினாலும். நல்லாட்சி என்ற பொய்வார்த்தையாலும், தன் இராஐதந்திர நடவடிக்கைகளை சிங்களப் புத்தியீவிகளைக் கொண்டு முன்நகர்த்திய அத்தனை செயற்பாடுகளும் புலம்பெயர் மக்களால் தோற்கடிக்கப்பட்டது.

சிறிலங்கா அரசின் பொய்ப்பிரச்சார நகர்வுகளாலும், உயிர் அச்சுறுத்தல்களாலும், இராஐதந்திர நடவடிக்கைகளினாலும், அரசியல் சாணக்கியத்தினாலும், உளவுத்துறைகளின் ஊடுருவல்களாலும் அழிக்கமுடியாத உயிர்உள்ள பொருளாக தமிழீழம் என்ற சொற்பதமும் தமிழீழத்தேசியக் கொடியும் பட்டொளிவீசி புலம்பெயர் தேசங்களில் பறந்துகொண்டிருக்கின்றது. இது இன்றைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு மிகுந்த தலையிடியைக் கொடுக்கும் விடயமாக அமைந்திருக்கின்றது. தமிழீழமக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு அப்பால், புலம்பெயர் நாடுகளில் பிறக்கும் பிள்ளைகளின் வாயிலிருந்து தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்னும் சொற்பதம் உச்சரிக்கபபடுவது சிறிலங்காவின் இனவாத அரசிற்கு தன் போர் வெற்றிகளைக் கொண்டாடமுடியாது, தமிழீழத்தை அழித்துவிட்டேன் என்ற எண்ணத்தை சித்தரிக்கமுடியாத இடையூறுகளை விளைவித்துக் கொண்டிருக்கின்றது.

சுதந்திரம் அடைவதற்கு முதல் யூதர்கள் இருவர் ஒரு இடத்தில் சந்தித்துவிட்டால் எங்களின் மறுசந்திப்பு சுதந்திர யூதநாட்டில்தான் நிகழும் என்று விட்டுப் பிரிந்து செல்வார்களாம், இதைப் பார்க்கும் மற்றவர்கள் கேலி செய்வார்களாம், சொந்த நாட்டில் ஒருபிடி மண்கூட உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை அதைப் பிரிந்து இன்னுமொரு நாட்டில் அகதிகளாக வாழ்ந்துகொண்டு மறுசந்திப்பு சுதந்திர யூதநாட்டில் என்கின்றீர்களே இது சாத்தியமாகுமா என்று சிரிப்பார்களாம். ஆனால் அந்தச் சொற்பதத்தின் வலிமை நிருபிக்கப்பட்டது. அதுபோல தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற சொற்பதம் புலம்பெயர்மக்களின் வாயிலிருந்து ஒலிப்பதும், இங்கு பிறந்த பிள்ளைகள் அந்தப் பதத்தை தங்கள் உயிர்மூச்சாக நினைப்பதும் சிறிலங்கா அரசிற்கும் இனவாதிகளுக்கும் மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது.

இவற்றை உயிரோட்டமாக வைத்திருக்கும் புலம்பெயர் கட்டமைப்புக்களை சிதைப்பதற்கான வேலைத்திட்டங்களை சிங்களதேசம் முன்னெடுத்து நிற்கின்றது. அதன் வெளிப்பாடே அக்கட்டமைப்புக்களின் கருவறையாகத் திகழும், தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களைக் குறிவைக்கும் செயற்பாடுகளாகும். 2009 ற்கு பின் இந்த முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்ட சிறிலங்கா அரசு புலம்பெயர் தேசங்களில் சில படுகொலைகளை நடத்தியும் தோல்வியையே சந்தித்தது, மௌனித்திருப்பவர்களை வெளிக்கொண்டு வருவதற்கும், இந்த மயக்கமான நேரத்திலும் முழுவீச்சாகச் செய்ற்பட்டுக் கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்களின் மனங்களை உடைப்பதற்கும் அரும்பாடு படுகின்றது, எங்கள் விரல்களைக் கொண்டு எங்கள் கண்களைக் குத்தும் கபட நாடகங்களை அரங்கேற்றுகின்றது. அந்தந்த நாட்டுச் சட்ட வரையறைக்குள் நின்று செயற்படும் செயற்பாட்டாளர்களை சிறிலங்காஅரசு தான் ஓர் இறையாண்மையுள்ள அரசு என்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்ட நடவடிக்கைகளுக்குள் கொண்டுபோவதற்கு முயற்சிக்கின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் வீர வரலாறுகளையும், வீரத் தளபதிகளையும், மாவீரச் செல்வங்களையும் புலம்பெயர் தமிழர் மத்தியில் நிலைநிறுத்தி, இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு எதிராக பலதடங்களிலும் குரல்கொடுத்து, எமது அடுத்த சந்ததிக்கும் இச்செய்திகளை பாடமாகப் புகட்டி வரலாற்றின் தடங்களை அவர்கள் மனதில் பதித்து, தமிழனின் போராட்ட குணத்தை இளைய சந்ததிக்கு கொடுத்து, தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் உள்ள சனநாயக விழுமியங்களையும், போர் தர்மங்களையும் பின்பற்றிய உண்மைகளையும் எடுத்துரைத்து இன்றைய இறுக்கமான காலகட்டத்திலும் மக்களோடு நின்று பயணிக்கின்றது தமிழர் ஒருங்கிணைப்புக் குழு. இக்கட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்காக பல மாத்தையாக்களையும் கருணாக்களையும் களமிறக்கி இருக்கின்றது சிறிலங்கா அரசு. இவர்களுக்கு இருக்கக்கூடிய விடுதலைப் புலிகள் என்ற பெயரைப் பயன்படுத்தி தேசியத்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பைக் களங்கப்படத்தி அழிப்பதற்கு முயற்சி செய்துள்ளது.

தமிழீழவிடுதலைப் புலிகளின் ஐரோப்பியத் தடைக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இலங்கை இனவாத அரசின் இதயத்தில் இடித்தது. வெகுண்டெழுந்த சிறிலங்கா அரசு, மாத்தையாக்களையும் கருணாக்களையும் பாவித்து விடுதலைப் புலிகள் போருக்கான தயாரிப்பை புலம்பெயர் நாடுகளில் செய்கின்றார்கள் என்ற பிரச்சாரத்தை விடுதலைப் புலிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்கின்ற கருணாக்களைக் கொண்டே செய்தது. அதன் பின்னணியிலேயே சிறிலங்காவில் தங்களை ஐனநாயகக்கட்சியாகப் பதிவுசெய்திருக்கும் கருணாக்களின் வசைபாடல் அமைந்தது. ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு என்வென்றால் 2009 ற்கு பின் தமிழீழ விடுதலைப்புலிகளின் தடையை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து வைத்திருப்பது தவறாகும். இதை ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலிக்கவேண்டும் என்ற பரிந்துரைமட்டும்தான் அதற்காக அது சொல்லும் காரணங்கள். விடுதலைப்புலிகள் இப்போது இல்லை, விடுதலைப்புலிகள் போராடும் சத்தியுடன் எங்கேயும் இல்லை, ஆகவே தடையைவைத்திருப்பது தவறு என்றே ஐரோப்பிய நீதிமன்றம் தீர்பளித்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இப்போதும் ஐரோப்பிநாடுகளில் இயங்குநிலையில் இருக்கின்றார்கள். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற கட்டமைப்புத் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் என்று கருணாக்களைக் கொண்டு இந் நாடுகளுக்கு சிறிலங்கா அரசு சொல்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்நாள் போராளிகள் என்ற தோரணையில் இவர்களால் சொல்லப்படுகின்ற செய்திகள் ஐரோப்பிய நாடுகளுக்கு சம்பந்தப்பட்டவர்களே கொடுக்கும் வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று சிறிலங்கா அரசு எதிர்பாக்கின்றது. இதனை அடிப்படையாக் கொண்டு சிறிலங்காவில் தங்களை ஐனநாயகக் கட்சியாகப் பதிவு செய்துள்ள போராளிகளின் கட்சி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்தான் விடுதலைப்புலிகளுக்கான நிதிசேர்ப்பில் ஈடுபட்டார்கள் அவர்கள் திரட்டிய நிதியில்தான் ஆயுதங்கள் வாங்கப்பட்டது என்ற செய்தியை தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ அறிக்கைமாதிரி இந்தச்சந்தர்ப்பத்தில் சொல்லியிருக்கின்றது. அதைவிட தொடர்ந்து நிதி திரட்டப்படுகின்றது என்றும் சொல்லியிருக்கின்றது.

ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை பரிசீலிக்க இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்நாள் போராளிகளின் இந்த அறிக்கை தடையை நீடிப்பதற்கு சிறந்த சாட்சியாக அமையும், இந்த விடயத்தில் எங்கள் கைகளைக் கொண்டே எங்கள் கண்களைக் குத்தும் நகர்வுகளைச் சிறிலங்கா அரசாங்கம் செய்கின்றது. இதற்குத் துணைபோகின்றவர்கள் சம்பந்தமாக தமிழீழமக்கள் மிகவிழிப்புடன் இருக்கவேண்டியது அவசியமாகின்றது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு 2009 இறுதியுத்தத்திற்குப் பின்னும் மிகச்சவாலாக இருக்கும் கட்டமைப்பு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் உபஅமைப்புக்களுமே, இதற்குள் தமிழீழமக்கள் கல்வியாக, கலையாக, விளையாட்டாக அரசியல் சக்தியாக, பொருளாதார விம்பமாக, அணிதிரன்டு நிற்பது இலங்கை அரசிற்கும் அதன் எடுபிடிகளுக்கும் சவாலாக இருக்கின்றது. இக் கட்டமைப்பை, கைப்பற்ற எடுத்த முயற்சிகள் படுதோல்வியைக் கண்டபின்பும் தொடர்ச்சியாக முயற்சிக்கின்றது. இதன் அடிப்படையிலேயே புதிய வியூகம் அமைத்து முன்னணியில் நின்று இவ் அமைப்புக்காகச் செயற்படுபவர்களைத் தாக்குகின்றது, மன உளைச்சலைக் கொடுக்கின்றது, உயிர் அச்சுறுத்தலை உண்டாக்குகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனித்த பின் தமிழினப் படுகொலையாளி கோத்தப்பாய ராஐபக்ச சொன்னான் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் கட்டமைப்புகளை வெகு விரைவில் அழிப்பேன் என்று, அந்த விரைவுக்காக சட்டரீதியாகவும் உயிர்களைப் பறித்தும் அவமானங்களை ஏற்படுத்தியும் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இன்று கோத்தப்பாய ராஐபக்சவின் செய்தியைத் தங்களின் கைகளில் எடுத்திருக்கும் கருணாக்கள் ஐந்துவருடத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களை இல்லாது ஒழிப்போம் என்கின்றார்கள். இந் நிலையில் வடக்கில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் ஆரம்பம் என்று தமிழினப் படுகொலையாளி மகிந்த சொல்கின்றார், இதன் அடிப்படையில் தமிழ்மக்கள் கைதுசெய்யப்படுகின்றார்கள், புனர்வாழ்வுபெற்ற போராளிகள் குறிவைக்கப்புடுகின்றார்கள், சிறிலங்கா இராணுவம் திட்டமிட்டுச் செய்யும் கொலைகள் கூட புனர்வாழ்வுபெற்ற போராளிகள் மீது சுமத்தப்படுகின்றது. சமகாலத்தில் புலிகளுக்காக வெளிநாடுகளில் நிதி திரட்டப்படுகின்றது என்று சிறிலங்காவில் தன்னை ஒரு கட்சியாகப் பதிவுசெய்திருக்கும் போராளிகள் கட்சி சொல்கின்றது. இவ்வேளையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழமக்கள் மிக நிதானமாக நகர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதே இவர்களின் செயற்பாடுகள் சொல்லிநிற்கின்றன.

Leave a comment