கினிகத்தேனையில் ஆர்ப்பாட்டமொன்றின் போது பதற்றம் – பொலிஸார் குவிப்பு

294 0

சமூர்த்தி கொடுப்பனவு பெறுவோர் கினிகத்தேனை நகரில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பதற்றமான சூழ்நிலை உருவானதனையடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வீதியை மறைத்து வாகனங்களை செல்லவிடாது தடுத்ததால் ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – கண்டி ஊடான பொது போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டது.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கைகளால் வாகனங்களை தாக்கியதால் அங்கு அமைதியற்ற நிலைமை உருவாகியுள்ளது.

அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசாங்கத்தால் வழங்கப்படும் சமூர்த்தி உதவு தொகைகளை சமூர்த்தி பயனாளிகளுக்கு முறையாக வழங்காமலும், உதவு தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 700ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சமூர்த்தி உதவு தொகையாக கினிகத்தேனை பகுதி பிரதேசவாசிகளுக்கு அரசாங்கத்தினால் 2000 ரூபாய் தொடக்கம் 3500 ரூபாய் வரை உள்ளிட்ட உதவு தொகை பணம் கூப்பனாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவு தொகையில் சமூர்த்தி பயனாளிகளுக்கான நலன்புரி சேவைகளுக்காக ஒரு தொகை பணம் வெட்டப்பட்டு மிகுதி பணங்களை பயனாளிகளுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடதக்கது.

இருந்தும் தற்பொழுது சமூர்த்தி உதவு தொகை பெறும் சில பயனாளிகளுக்கு இந்த உதவு தொகையை உரிய வேளையில் வழங்காமலும், நிறுத்தப்பட்டிருப்பதாகவும் சமூர்த்தி பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சமூர்த்தி உதவு தொகையை எமக்கு அரசாங்கம் வழங்கவேண்டும் என வழியுறுத்தியே சமூர்த்தி உதவு தொகை பயனாளிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து அம்பகமுவ பிரதேச செயலாளரிடம் சமூர்த்தி பயனாளிகளின் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்

Leave a comment