தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்டு கட்சிகள் இணைகிறது

308 0

உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்டு கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நலனுக்காக தி.மு.க. நடத்தும் போராட்டங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன.

மக்கள் நலக்கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி அதன் கீழ் அவர்கள் செயல்பட்டாலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடத்தும் போராட்டங்களுக்கு குரல் கொடுத்து வருகின்றன.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் தி.மு.க. நடத்திய மனித சங்கிலி போராட்டத்தில் தொல்.திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் இரா.முத்தரசனும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் நலனுக்காக நடத்தப்பட்ட இந்த அறப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளித்தது. ஏற்கனவே விவசாயிகள் பிரச்சினைக்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவுக்கு திருமாவளவனும், முத்தரசனும் ஒத்த கருத்துக்களை கூறினார்கள்.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழாவை தி.மு.க. மிக பிரமாண்டமாக சென்னையில் நடத்தியது. இதில் அகில இந்திய அளவில் தலைவர்களும் தி.மு.க. கூட்டணியில் உள்ள தலைவர்களும் மட்டுமே பங்கேற்றனர்.

மற்ற தமிழக அரசியல் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படவில்லை. இது திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் தி.மு.க. முன்னெடுத்து செல்லும் முக்கிய மக்கள் பிரச்சினைகளுக்கு திருமாவளவன், முத்தரசன் ஆகிய இருவரும் அவ்வப்போது ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.

தி.மு.க. நடத்திய மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க சென்ற மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு இருவரும் கண்டனம் தெரிவித்தனர்.

 

வருகிற 11-ந்தேதி முரசொலி நாளிதழின் பவள விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அதை ஏற்று இந்த கட்சிகள் பங்கேற்கின்றன.

செப்டம்பர் மாதம் 17-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்படுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை அழைக்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.

தி.மு.க.வின் மாநில சுயாட்சி கொள்கையை திருமாவளவனும் தற்போது கையில் எடுத்துள்ளார். மாநில சுயாட்சி முழக்கத்தை இந்தியாவிலேயே தி.மு.க. தான் முன் வைத்தது. அண்ணா மறைவுக்கு பிறகு கலைஞர் வரையறுத்த தி.மு.க.வின் ஐம்பெரும் முழக்கங்களில் ‘‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’’ என்பதும் ஒன்றாகும். அந்த முழக்கத்தை திருமாவளவன் மீண்டும் கையில் எடுத்து இருக்கிறார்.

மொழிப் போருக்காக தி.மு.க. நடத்திய போராட்டம் போல மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் எதேச்சதிகாரத்தை கண்டிக்கும் வகையில் இந்த மாநில சுயாட்சி மாநாட்டை திருமாவளவன் ஒருங்கிணைக்கிறார்.

இதன் மூலம் திருமாவளவன் தி.மு.க.வுடன் கூட்டணி அச்சாரத்தை இப்போதே போடத் தொடங்கியுள்ளார். அவருடன் இரு கம்யூனிஸ்டு கட்சிகளையும் இந்த கூட்டணியில் சேர்க்கவும், அவர் காய்நகர்த்தி வருகிறார்.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதாலும் அதனை தொடர்ந்து 2 வருடத்தில் பாராளுமன்ற தேர்தலும் வர இருப்பதாலும் தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவதன் மூலம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று அரசியல் கணக்கு போடுகிறார்.

2006-2011 தி.மு.க. ஆட்சியின் போது விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருந்தது. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை தி.மு.க. கூட்டணியுடன் விடுதலை சிறுத்தை தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்தது. பின்னர் அக்கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தை வெளியேறியது.

மீண்டும் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தனித்து நிற்பதைவிட கூட்டணி சேர்வது நல்லது என்று தி.மு.க. கருதுகிறது.

இதனால் விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்டு கட்சிகளையும் தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர தி.மு.க. முன்வருவதாக தெரிகிறது.

Leave a comment