பிரேசில்: பாராளுமன்ற கீழ் சபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிபர் வெற்றி

248 0

பிரேசில் நாட்டு அதிபரான மைக்கேல் டெமர், பாராளுமன்ற கீழ் சபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

பிரேசில் நாட்டில் அதிபராக இருந்த டில்மா ரூசெப் முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து துணை அதிபராக இருந்த மைக்கேல் டெமர் புதிய அதிபரானார்.

இவர்மீது கடந்த 2014-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது டில்மா ரூசெப்புக்காக தேர்தல் நிதி திரட்டுவதில் முறைகேடு செய்ததாக புகார் கூறப்பட்டது. மேலும், பல ஊழல் புகார்களும் தெரிவிக்கப்பட்டன. இதனால் டெமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அவர்மீது, தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், பாராளுமன்றத்தின் கீழ் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டது. இதில் மொத்தமுள்ள 513 பேரில் மூன்றில் ஒரு பங்கான 171 பேரின் ஆதரவு கிடைத்தால் அவர் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மைக்கேல் டெமருக்கு ஆதரவாக 263 பேரும், அவருக்கு எதிராக 227 பேரும் வாக்களித்தனர். மற்றவர்கள் சபைக்கு வரவில்லை. இதையடுத்து டெமரின் அதிபர் பதவி தப்பியது.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிபர் மைக்கேல் டெமர் இந்த வெற்றியை பெரிதாக கொண்டாட விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

Leave a comment