கர்நாடக சிறையில் சசிகலாவிடம் ஆலோசனை கேட்ட விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 4 அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகன் ஆணழகன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் கூறி இருப்பதாவது:-
கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரிசங்கர், அளித்த பேட்டியில், “கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆலோசனை மற்றும் உத்தரவின் பேரில் தமிழக அரசு வழிநடத்தப்படும்” என கூறினார்.
சிலநாட்கள் கழித்து, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை பார்த்ததாகவும், அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் பேசியதாகவும் கூறியிருந்தனர்.
அவர்களின் இந்த செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 188-வது சரத்துக்கும், அமைச்சராக பொறுப்பு ஏற்கும் போது எடுத்த ரகசிய காப்பு உறுதி மொழிக்கும் எதிரானது. இந்த செயல்களுக்கு முதல் -அமைச்சரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
எனவே முதல்-அமைச்சர் மற்றும் மேற்கண்ட எம்.எல்.ஏ.க்களின் பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கும், சட்டசபை செயலாளருக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது சபாநாயகரிடம் அளித்த மனுவுக்கு கிடைத்த பதில் என்ன? இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தானா? என்பது குறித்து மனுதாரர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரரின் குற்றச்சாட்டு தொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் 4 அமைச்சர்களும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

