தமிழ்நாடு, கேரளாவில் பா.ஜனதா தலைவர்களை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி

318 0

தமிழ்நாடு, கேரளாவில் பா.ஜனதா தலைவர்களை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் திருச்சூர், கண்ணூர் பகுதிகளில் இருந்து கடந்த ஆண்டு 21 பேர் வளைகுடா நாடுகளுக்கு சென்றனர்.

குடும்பத்தினரிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 21 பேரும், அதன் பிறகு குடும்பத்தாரை தொடர்பு கொள்ளவில்லை. இதுபற்றி உறவினர்கள் விசாரித்தபோது, அவர்கள் அனைவரும் சிரியாவில் தஞ்சமடைந்து இருப்பதும், அங்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்து விட்டதும் தெரிய வந்தது.

இதுபற்றி உறவினர்கள் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்தனர். மத்திய உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் இதுபற்றி விசாரித்தனர். இதில், 21 பேரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

கேரளாவில் இருந்து சிரியா சென்ற 21 பேரின் விவரங்களும் திரட்டப்பட்டு அவர்களின் நடவடிக்கைகளை உளவுத்துறையினர் கண்காணித்து வந்தனர். இது போல அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. அதிகாரிகளும் இந்தியாவில் இருந்து சிரியா சென்று தீவிரவாதத்தில் ஈடுபடுவோரை கண்காணித்து வந்தனர்.

இதில் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஷாஜகான் வெள்ளுவகந்தி என்பவர் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஐ.எஸ். அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் வேலைகளை செய்து வருவது தெரிய வந்தது. இதுபற்றி அமெரிக்க உளவுத்துறையினர் இந்திய அதிகாரிகளுக்கும், துருக்கி நாட்டு தூதரகத்திற்கும் தகவல் கொடுத்தது. அவர்கள் இஸ்தான்புல் நகரில் தங்கியிருந்த ஷாஜகானை கைது செய்தனர். பின்னர் அவர், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

அங்கிருந்து சென்னை திரும்பிய ஷாஜகான், தனது பெயரை முகம்மது இஸ்மாயில் முகைதீன் என மாற்றிக்கொண்டு போலி பாஸ்போர்ட் பெற்றார். அதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து கடந்த மாதம் துருக்கி நாட்டிற்கு சென்றார்.

இம்முறை துருக்கி அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவி விட்டு சிரியா நாட்டு எல்லை வரை சென்று விட்டார். அங்கு எல்லையில் காவல் புரிந்த அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டார். அவரை கைதுசெய்த அதிகாரிகள் அங்கிருந்து ஷாஜகானை இந்தியாவுக்கு நாடு கடத்தினர். மேலும் இந்த தகவலை இந்திய உளவுத்துறைக்கும் தெரிவித்தனர்.

அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் ஷாஜகான் வந்து இறங்கியதும் கைது செய்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

மத்திய உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை ஷாஜகான் தெரிவித்தார். குறிப்பாக இந்தியாவின் தென் மாநிலங்களில் நாசவேலைகளில் ஈடுபட ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாடு, கேரளாவில் உள்ள பா.ஜனதா மற்றும் விசுவ இந்து பரி‌ஷத் தலைவர்களை கொல்ல சதி திட்டம் வகுத்துள்ளதும் தெரிய வந்தது.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு கேரளாவில் இருந்து ஆள் சேர்த்து அவர்கள் மூலமே சதிச்செயல்களை அரங்கேற்ற ஐ.எஸ். அமைப்பினர் திட்டமிட்டிருப்பதையும் உளவுத்துறையினர் கண்டு பிடித்தனர்.இதையடுத்து கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து சிரியாவுக்கு சென்றவர்கள் யார்? யார்? இவர்களில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணியில் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது.

Leave a comment