கடந்த காலங்களில் அரசியல் அதிகாரம் மற்றும் அரவணைப்பிற்கிணங்க, பின் வாசலால் பொது நம்பிக்கை பொறுப்பாளர் பதவிக்கு தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டமை, அந்த திணைக்களத்தின் நடவடிக்கைகள் பாதிப்படைய காரணமானதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனவே, அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இவற்றை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.
பொது நம்பிக்கை பொறுப்பாளர் திணைக்கள நடவடிக்கைகள் குறித்து ஆராய இன்று விஷேட விஜயம் ஒன்றை மேற்கொண்ட வேளையே, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த திணைக்களம் கடந்த காலங்களில் புத்தசாசன அமைச்சின் கீழ் இருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், தமது கோரிக்கைக்கு இணங்க அந்த திணைக்களம் தற்போது நீதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, பொது நம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களத்தில் 370 மில்லியன் ரூபா மோசடி நடைபெற்றுள்ளதாக, முன்னாள் பொது நம்பிக்கை பொறுப்பாளர் எனக்கு அறிக்கை ஒன்றை வழங்கினார். நான் அதனை நிதி குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளேன்.
அடுத்துவரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் எதிர்பார்க்கப்பட்ட, நிறைவேற்றப்படாத பொறுப்புக்கள் குறித்து அறிக்கை தருவதாக பொது நம்பிக்கை பொறுப்பாளர் கூறியுள்ளார்.
இதற்கமைய, நாம் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் பொது நம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களத்தை புனரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம் என, விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

