ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வலியுறுத்தும் பொது மன்னிப்பு சபை

468 0

201608092026290795_Amnesty-International-appeals-for-repeal-of-AFSPA_SECVPFஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய மணிப்பூரின் இரும்பு பெண்மணி ஐரோம் ஷர்மிளா (வயது 44) இன்று தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

அவரது இந்த முடிவினை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ள நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை அரசு கைவிட வேண்டும் என்றும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச பொது மன்னிப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபற்றி சர்வதேச பொது மன்னிப்பு சபைக்கான இந்திய கிளையின் மூத்த பிரச்சாரகரான அபிர் கூறுகையில், “உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்ட ஐரோம் ஷர்மிளாவின் முடிவானது, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு இந்தியாவுக்கு கிடைத்த இன்னொரு வாய்ப்பாகும்.

மனித உரிமைகள் மீதான பேரார்வத்தின் காரணமாகவே அவர் கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்தார். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் உள்ளிட்ட எந்த கடுமையான சட்டத்திற்கும் எந்த சமூகத்திலும் இடமில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவரது உறுதியை குலைக்கும் வகையில் அரசாங்கம் அவரை கைது செய்து அவரை மருத்துவமனை அறையில் வைத்து கட்டாயமாக உணவு வழங்கியது” என்றார்.

முன்னதாக, போராட்டத்தைக் கைவிட்ட ஐரோம் ஷர்மிளா, தான் ஆசிரமத்தில் வசிக்கப் போவதாகவும் தனக்கு எந்தவித பாதுகாப்பும் தேவையில்லை என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.