வடகொரியா மீது சீனா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

286 0

தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது சீனா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐ.நா.வின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்திவருகிறது. கடந்த வெள்ளிகிழமை கண்டம்விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனை நிகழ்த்தியது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அனைத்து பகுதிகளும் வடகொரிய ஏவுகணை தாக்குதல் எல்லைக்குள் வந்துவிட்டதாக வடகொரிய அதிபர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன. வடகொரியாவின் இந்த செயலுக்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், வடகொரியா பிரச்சனையில் சீனா எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அவர் டுவிட்டரில் கூறியதாவது:-
நான் சீனா மீது மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். எங்கள் முட்டாள்தனமான கடந்தகால தலைவர்கள் சீனா வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் வர்த்தகம் செய்ய அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் வடகொரியா பிரச்சனையில் எங்களுக்கு ஆதரவாக சீனா ஒன்றும் செய்யவில்லை. இதை இனியும் தொடர அனுமதிக்க மாட்டோம். சீனாவால் எளிதாக இந்த சிக்கலை தீர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment