கூகுளை தொடர்ந்து ஆல்ஃபாபெட் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை

395 0

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஆல்ஃபாபெட் நிறுவனத்தில் இணைந்திருப்பதை அந்நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளார்.

‘கூகுள் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை சிறப்பாக செயல்படுகிறார், நிறுவனத்தின் வளர்ச்சி, ஒப்பந்தங்கள் மற்றும் வித்தியாச சாதனங்களை அறிமுகம் செய்வதில் அதிக முனைப்புடன் பணியாற்றி வருகிறார். அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிப்பதோடு அவரை ஆல்ஃபாபெட் நிர்வாக குழுவில் வரவேற்றிருப்பது பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.’ என ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லேர்ரி பேஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகுளில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்தவர் ஆவார். ஐஐடி கராக்பூர் மாணவரான சுந்தர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அந்நிறுவன கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப யுக்திகளுக்கு பொருப்பு வகிக்கிறார். 2004-ம் ஆண்டு முதல் கூகுளில் பணியாற்றி வரும் சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தின் சார்பில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு பயன்தரும் சாதனங்களை உருவாக்குவதில் பணியாற்றியுள்ளார்.

பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ள சுந்தர் கூகுள் இணை நிறுவனர்களான லேர்ரி பேஜ் மற்றும் செர்ஜரி ப்ரின் ஆகியோருடன் நெருக்கமாக பணியாற்றியதைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக பணியை துவங்கினார்.

சுந்தர் பிச்சை தலைமையின் கீழ் கூகுள் நிறுவனத்தின் விற்பனை அதிகரித்ததோடு, யூடியூப் வியாபாரம் வளர்ச்சியை சந்தித்தது. இத்துடன் மெஷின் லெர்னிங், ஹார்டுவேர் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் அந்நிறுவனம் முதலீடு செய்து வருகிறது.

 

Leave a comment