கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி

383 0

கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்மேற்கு பருவ மழையால் கேரள மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் கேரள மாநிலத்தையொட்டி உள்ள எல்லை பகுதிகளில் டெங்கு வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு டெங்கு பாதிப்பு இருந்து வருகிறது. இதையடுத்து மாவட்ட சுகாதார துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கொசு மருந்து அளிப்பது, சுற்றுபுறத்தில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் 28 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் வைரஸ் காய்ச்சலுக்கு 183 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு தனி வார்டில் டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

கோவை வெள்ளமடை சாமிநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் மகள் தரணி (வயது 8). கடந்த சில நாட்களுக்கு முன்பு தரணிக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்தது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமியை அனுமதித்தனர்.

அங்கு பரிசோதனையில் தரணிக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டெங்கு சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த தரணி பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் ஆனைமலை சக்தி நகர் கிட்டுவின் மகள் மகாலட்சுமிக்கு (7) காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்தது. இதையடுத்து அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் அங்கு மகாலட்சுமியின் உடல்நிலை மோசமானதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால்செல்லும் வழியிலேயே மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

கோவை மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது டெங்குவால் 2 குழந்தைகளும் பலியாகி உள்ளனர். இதனால் டெங்குக்கு மொத்தம் 11 பேர் பலியாகி உள்ளனர்.

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Leave a comment