நளினிக்கு கால குறுகிய விடுதலை – சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

885 0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்து வரும் நளினி ஸ்ரீதரனுக்கு 6 மாத கால குறுகிய விடுதலை வழங்குவது தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பினை வழங்கவுள்ளது.

லண்டனில் வசிக்கும் நளினியின் புதல்வியினது திருமண வைபத்தில் கலந்து கொள்வதற்காக அவர் குறுகிய சிறை விடுவிப்பிற்கு விண்ணப்பித்திருந்தார்.

இது தொடர்பான தீர்ப்பே நாளை வழங்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, ராஜீவ் கொலைச் சம்பவம் நிகழ்ந்து கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட நிலையில் இந்த வழக்கில், பல்வேறு மர்ம முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப்படாமல் இருப்பதாக பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வெளியாகும் நாளேடு ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

‘ராஜீவ் படுகொலை பயங்கரவாத செயலாகக் கருதப்படுமேயானால், அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் பல்வேறு வகையான குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும்.

ஆனால், ரஜீவ் கொலை சம்பவத்துக்குப் பிறகு அப்படியான நிகழ்வுகள் நடைபெறவில்லை.

இது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் நடைபெற்ற கொலைச் சம்பவமாகும்.

எனவே, இதனை குற்றவியல் சட்டத்தின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்திருக்கவேண்டும்.

தடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியது ஏற்றுக்கொள்ள முடியாததென நீதிமன்றத்தினால் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு பயங்கரவாத சட்டதின் கீழ் பதிவு செய்யப்பட்டமை செல்லாதது என்று அறிவித்துள்ள நீதிமன்றம், அந்தத் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், அவர்களுக்கு எவ்வாறு தண்டனை விதிக்க முடியும் என பழ நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேல் நீதிமன்றம் குறிப்பிட்டது போல், ராஜீவ் காந்தி படுகொலையை சாதாரண குற்றவியல் வழக்காகப் பதிவுசெய்யப்பட்டிருந்தால், இந்த வழக்கு முதலில், நீதவான் நீதிமன்றில் வழக்கு நடைபெற்றிருக்கும்;.

அதன் பிறகே உயர்நீதிமன்றம் வரை சென்று நீதியைப் பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

எனினும், பயங்கரவாத சட்த்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனால் அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிறகு நேரடியாக மேல் நீதிமன்றத்துக்கு  செல்ல நேர்ந்தது.

இதனால், குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்கள் நீதி பெறுவதற்கான பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டுவிட்டதாகவும் அந்த செவ்வியில் பழ நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment