திருவண்ணாமலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் எம்.ஜி.ஆர். உருவப்படத்தினை திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. விழாவையொட்டி இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்பட பல்வேறு பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பின்னர் மாலை 4 மணி முதல் 5 மணி வரை எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இன்னிசை கச்சேரி நடக்கிறது. மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவுக்கு சட்ட பேரவைத் தலைவர் தனபால் தலைமை தாங்குகிறார். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை வகிக்கிறார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்கிறார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொள்கிறார். இதையொட்டி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியமே திருவண்ணாமலைக்கு வருவதாகவும், திண்டிவனம் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை விடுதியில் ஓய்வெடுத்த பின் மாலை 5 மணியளவில் விழா மேடைக்கு வருவார் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் எம்.ஜி.ஆர். உருவப்படத்தினை திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், பல்வேறு அரசு துறைகள் சார்பில் 19 ஆயிரத்து 859 பயனாளிகளுக்கு ரூ.112 கோடியே 7 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
மக்களவை துணைத் சபாநாயகர் தம்பிதுரையும் பேசுகிறார். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். முடிவில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நன்றி கூறுகிறார்.
விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை பெரியார் சிலையில் இருந்து அரசு கலைக்கல்லூரி வரை அலங்கார வளைவுகள், மின் அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வழி நெடுகிலும் வரவேற்பு வளைவுகள், தோரணங்கள் கட்டப்பட்டும், முதல்-அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் திருவண்ணாமலை நகரமே விழா கோலம்பூண்டு உள்ளது.
மேலும் முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு வேலூர், காஞ்சீபுரம், கோவை, திருச்சி, மதுரை, நாமக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழா நடைபெறும் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. நகருக்குள் வரும் அனைத்தும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே, அனுமதிக்கப்படுகின்றன. விழா மேடை, மைதானம் முழுவதும் மோப்ப நாய் மற்றும் வெடி குண்டு நிபுணர்களை கொண்டு, தீவிர சோதனை நடத்தப்படுகிறது.கண்காணிப்பு கோபுரம் அமைத்தும், கேமராக்கள் பொருத்தியும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

