கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 10 பேருக்கும் ஆகஸ்ட் 11-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு

211 0

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 10 பேருக்கும் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை காவலில் வைக்க கும்பகோணம் கோர்ட்டு நீதிபதி சரவணபவ உத்தரவிட்டார்.

கதிராமங்கலம் பிரச்சினை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் கும்பகோணம் கோர்ட்டிலிருந்து வீடியோ கான்பரன்சிங்கில் நீதிபதி விசாரணை நடத்தினார். இதையடுத்து ஆகஸ்ட் 11-ம்தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிரமங்கலத்தில் கடந்த 30-ம் தேதி கச்சா எண்ணெய் எடுக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன், தர்மராஜ், விடுதலை சுடர், ரமேஷ், சந்தோஷ், செந்தில்குமார், முருகன், சுவாமிநாதன், சிலம்பரசன், வெங்கட்ராமன் ஆகியோர் மீது கொலைமுயற்சி, அரசு அதிகாரிகள் பணி செய்வதை தடுத்தது, மிரட்டியது உள்ளிட்ட பல வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.

இதையடுத்து அவர்களை கடந்த 1-ம் தேதி கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 10 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து கடந்த 14-ம் தேதி கும்பகோணம் கோர்ட்டுக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர்.அப்போது வழக்கு விசாரணையை நேற்று நீதிபதி ஒத்திவைத்தார். இந்த நிலையில் நேற்று கும்பகோணம் கோர்ட்டிலிருந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்படடது. பின்னர் அவர்களை ஆகஸ்ட் 11-ம் தேதி வரை காவலில் வைக்க கும்பகோணம் கோர்ட்டு நீதிபதி சரவணபவ உத்தரவிட்டார்.

Leave a comment