பரராஜசிங்கம் எம்.பி. கொலை: 5 சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு

222 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 5 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல், தொடர்ந்து  எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வழக்கு விசாரணை, நவம்பர்  20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் முன்னிலையில், இந்தச் சந்தேகநபர்கள் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, சந்தேகநபர்களுக்கான விளக்கமறியலை நீதிபதி நீடித்ததுடன், வழக்கு விசாரiணையையும் ஒத்திவைத்தார்.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம், இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ வீரரான கே.ஏ.மதுசிங்க ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் இன்னும் கைதுசெய்யப்படாமலிருப்பதால், அவர்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டெம்பர்  20ஆம், 25ஆம் திகதிகளில்,  மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றத்தடுப்புப் பிரிவினர்  விளக்கமளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், எதிர்வரும் நவம்பர் 6ஆம், 7ஆம் திகதிகளில், முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விளக்கமளிப்பதற்கும், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

நீதிமன்றப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எப்போதும் இல்லாதவாறு, பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய, நீதிமன்றக் கட்டத்துக்கு முன்னால் செய்தி சேகரிக்கச் சென்று ஊடகவியாலாளர்களின் ஊடக அடையாள அட்டையை, பொலிஸார் சோதித்தனர்.

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டட பாதுகாப்புக் கடமையில் நேற்றையதினம் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஊடவியலாளர்களிடம் வந்து, “உங்கள் ஊடக அடையாள அட்டையைக் காண்பியுங்கள்” எனக் கோரினார்.

பின்னர் ஊடகவியலாளர்கள் தமது ஊடக அடையாள அட்டையை காண்பித்த. பின்னரே, அவ்விடத்தில் நிற்பதற்கு, அப்பொலிஸ் அதிகாரி ஊடகவியலாளர்களை அனுமதித்தார்.

மேலும், மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத்தைச் சுற்றி, விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், கூடுதலான பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.

Leave a comment