யாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – நீதித்துறைக்கு சவால் – பலரும் கண்டனம்

11248 60

நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் நீதிக்கே சவால் விடும் வகையில் உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலே மிகவும் பாரதூரமான, உயிர் அச்சுறுத்தல் உள்ள வழக்குகளை அவர் நேர்மையாக கையாண்டிருக்கின்றார்.

இவ்வாறான குற்றச்செயல்கள் தொடராமல் பாதுகாப்பது பாதுகாப்புத் தரப்பினருடைய கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த தாக்குதல் நல்லாட்சிக்கும் இலங்கையின் சட்டத்துறைக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவால் என கல்வி இராஜங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அத்துடன் இந்த சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த சம்பவத்திற்கு வடக்கு மாகாண சபையும் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

வடமாகாண சபை முதல்வர் சீவிகே சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உயிரிழந்த காவற்துறை அலுவலரின் குடும்பத்தற்திற்கு தமது அனுதாபங்களையும் வடமாகாண சபை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த தாக்குதல் முயற்சியினை வன்மையாகக் கண்டிப்பதுடன் இது ஒரு கோழைத்தனமானதும் ஜனநாயகத்துக்கு விரோதமானதுமான செயல் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 

Leave a comment