நல்லூரான் வீதியில் நீதிக்கு நடந்த அநீதி!

6648 0

13 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை யாழ்ப்பாண அரசின் தலைநகராக நல்லூர் விளங்கியது. நல்லூரின் கடைசி மன்னான சங்கிலி குமாரன் அந்நியரான போர்த்துக்கேயரின் ஆட்சியை தீவிரமாக எதிர்த்து அடிபணியாது நல்லூரை வீரத்தின் விளை பூமியாக மாற்றினான்.

யாழ்ப்பாணத்தின் குறீயீடாக விளங்கும் நல்லூர் ஈழத் தமிழர்களுடைய வாழ்வில் வசந்தங்களையும் வலிகளையும் தாங்கும் பூமியாக இன்றும்  விளங்குகின்றது.

அன்று நல்லூரான் வீதியிலே விடுதலை தாகம் கொண்டு நீர் ஆகாரம் இன்றி தன் இனத்திற்காய் 12 நாட்கள் உருகிய அந்த மெழுவர்தி அணைந்து போனது. அவன் கனவு மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! என்றே….

அகிலத்திலேயே அகிம்சைக்கு இலக்கணமான இந்தியா பசியால் துடித்த பார்த்தீபனை தன் கோர சக்கரத்தால் நசித்து கொன்றது, இந்த நல்லூரான் வீதியிலேயே! அன்று நீதிக்கு மாபெரும் அநீதி நடந்தது.

நல்லூர் தெற்கு வாசல் கோபுரத்திற்கு முன்பாக இன்று (22) சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மெய்ப் பாதுகாவலர்களின் சாதுரியமான செயற்பாட்டினால் நீதிபதி இளஞ்செழியனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இச் சம்பவம் தொடர்பாக கருத்துக்கூறிய நீதிபதி இளஞ்செழியன்  “ என் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் ஆனது நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே நான் கருதுகின்றேன். ஏனெனில் அண்மைக்காலமாக நடைபெறும் வழக்குகள் அனைத்தும் உயிர் அச்சுறுத்தல் உள்ள வழக்குகள் தான் அத்துடன் எனது மெய் பாதுகாவலர்களை எவருக்கும் தெரியாது. அதனால் அவர்களை இலக்கு வைக்க வேண்டிய தேவை எவருக்கும் இருந்திருக்காது. ஆகவே இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு , நீதி அமைச்சு மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழு எனது பிரதம நீதியரசரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன்.” என தெரிவித்தார்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகியோர் தலைமையிலான தீர்ப்பாயத்தில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.

தாக்குதலாளியின் இலக்கு நீதிபதி அல்ல என சில பொலிஸ் அதிகாரிகள் தெரித்துள்ளார்கள் என அறிய முடிகிறது. யாழ்ப்பாண மக்கள் இது நீதியின் மீது நடந்த அநீதி என விசனம் கொண்டுள்ளனர்.

நல்லூர் வீதியில் காலத்துக்கு காலம் ஏகாதிபத்திய வாதிகளால் எம் குரல்வளைகள் நசுக்கப்பட்டு வருவது எமக்கான சாபக் கேடா? என மக்கள் அச்சத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a comment