விபத்துக்களற்ற மாகாணமாக வடமாகாணத்தைக் கட்டியெழுப்புவோம் – அமைச்சர் டெனிஸ்வரன்

279 0
வடமாகணத்தில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துதல் சம்மந்தமான முக்கியகூட்டம் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் 18.07.2017 செவ்வாய்க்கிழமையன்று பிற்ப்பகல் 2 மணியளவில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகிய மக்கள் பிரதிநிதிகளும், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் அவர்களும் போக்குவரத்துடன் தொடர்புடைய அதிகாரிகளான வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் நீக்கிலாஸ்பிள்ளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், இலங்கை போக்குவரத்து சபையின் நிறைவேற்று அதிகாரி, உயர் பொலிஸ் அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஸ்ட பிராந்திய முகாமையாளர், வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஒன்றியத்தின் தலைவர், இலங்கை போக்குவரத்து சபையின் 7 சாலைகளின் முகாமையாளர்கள், மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையிலுள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இக்கூட்டமானது இணைந்தநேர அட்டவணையினை வடமாகணத்தில் 60:40 என்ற விகிதாசாரத்தில் அமுல்ப்படுத்துதல் மற்றும் வவுனியா புதிய மத்திய பேருந்து நிலையத்தினை மீள இயங்கவைத்தல் தொடர்பாக கடந்த 11.07.2017 ம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் தொடர்ச்சியாக நடைபெற்றது.
குறிப்பாக அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இணைந்தநேர அட்டவணையில் ஏதேனும் நியாயமான திருத்தங்கள் இருப்பின் அவைபற்றி ஒருவார காலத்தினுள் அதிகாரசபைக்கு தெரியப்படுத்துமாறும், அத்திருத்தங்கள் கருத்தில் எடுக்கப்படுமென்றும் அமைச்சர் அவர்களினால் ஏலவே தெரியப்படுத்தியிருந்தமைக்கு அமைவாக, இரண்டு சேவை வழங்குனர்களும் பல்வேறு திருத்தங்களையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர், மேலும் உள்ளூர் சேவைகளுக்கான இணைந்தநேர அட்டவணையினையும் தயார்செய்ததன் பின்னரே அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான இணைந்தநேர அட்டவணை அமுல்ப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையினை இலங்கை போக்குவரத்து சபையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்ப்பட்ட பிரச்சினையின்போது பிரதானமான கோரிக்கையாக முன்வைத்திருந்தனர்.
மேற்படி போக்குவரத்து சேவை வழங்குனர்களின் பல்வேறு கோரிக்கைகளும் நியாயப்பாடுகளும் அமைச்சர் அவர்களினால் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு பின்வரும் முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டன.
1. உள்ளூர் மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான இணைந்த நேர அட்டவணையினை அனைத்து மாவட்டங்களிலும் 60:40 என்ற விகிதாசாரத்தில் ஒருமாத காலத்திற்கு பரிட்சார்த்தமாக நடைமுறைப்படுத்துதல்;
2. மேற்படி பரிட்ச்சார்த்த காலப்பகுதியினுள் ஏதேனும் நடைமுறைச்சிக்கல்கள் காணப்படின் அவை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு நியாயமான விடயங்களாகவிருப்பின் அவை தொடர்பான திருத்தங்கள் புதிய இணைந்தநேர அட்டவணையில் உள்வாங்கப்படுதல் எனவும்;
3. ஒருமாத காலத்திற்கு பின்னர் புதிதாக வழங்கப்படும் இணைந்தநேர அட்டவணையினையும் போக்குவரத்து ஒழுங்குவிதிகளையும் மீறுகின்றவர்களுக்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பதேனவும்;
4. வவுனியா புதிய மத்திய பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் நிறுத்துவதற்கான இடப்பற்றாக்குறை காரணமாக, உள்ளூர் சேவை வழங்கும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சேவையினை ஆரம்பித்து புதிய பேருந்துநிலையத்தினை சென்று பின்னர் தமது வழித்தடத்தில் பயணிக்க வேண்டுமெனவும்; அவ்வாறே மீண்டும் திரும்பிவரும்போது புதிய பேருந்து நிலையம் சென்று பழைய பேருந்து நிலையத்தில் சேவையினை நிறைவு செய்ய வேண்டுமெனவும்; அவ்வாறே மாவட்டங்களுக்கிடையிலான சேவைகள் புதிய பேருந்து நிலையத்தில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு பழைய பேருந்து நிலையம் சென்று தத்தமது வழித்தடத்தில் பயணிப்பத்தோடு திரும்பி வருகையில் பழைய பேருந்து நிலையம் சென்று புதிய பேருந்து நிலையத்தில் சேவையினை முடிவுறுத்த வேண்டுமெனவும்;
5. வெளிமாகாணங்களில் இருந்து வடமாகாணத்திக்குள் வருகின்ற பேருந்துகள் அனைத்தும் பயணிகளை இறக்குவதற்கும் ஏற்றுவதற்குமாக வவுனியாவில் நான்கு புதிய நிறுத்துமிடங்களை அடையாளப்படுத்துவது எனவும்;
6. புதிய பேருந்து நிலையத்தில் இடவசதியினை ஏற்ப்படுத்தும் பொருட்டு அதற்க்கு அருகாமையில் உள்ள 5 ஏக்கர் நிலத்தினை கௌரவ முதலமைச்சர் அவர்களிடம் கோரி, அது கிடைக்கபெற்றதன் பின்னர் உள்ளூர் மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான சேவைகள் அனைத்தும் புதிய மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்தல் வேண்டுமெனவும்;
7. வடமாகாண போக்குவரத்து அதிகாரசபையில் ஆளணிப்பற்றக்குறை நிவர்த்திசெய்யப்படும் வரையில் இரு சேவை வழங்குனர்களின் நேரக்கணிப்பாளர்களோடு சேர்த்து தற்போது அதிகாரசபையில் இருக்கின்ற நேரக்கணிப்பாளர்களும் சேவையில் ஈடுபடல் வேண்டுமெனவும்;
8. மேற்படி நேரக்கணிப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடலும் அறிவுறுத்தல்களும் எதிர்வரும் 21.07.2017 ம் திகதியன்று முற்ப்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகணப் பணிமனையின் கேட்போர்கூடத்தில் வைத்து வழங்கப்பட வேண்டுமெனவும்; அதன்பொருட்டு இரு சேவை வழங்குனர்களின் நேரக்கணிப்பாளர்களையும் உரிய நேரகாலத்தோடு அதற்குரிய அதிகாரிகள் அனுப்பிவைத்தல் வேண்டுமெனவும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்படி நேரக்கணிப்பாளர்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதன் பின்னர் வடமாகாணத்திற்கான இணைந்தநேர அட்டவணை அமுல்ப்படுத்தப்படும் திகதியினை அமைச்சர் அவர்கள் அறிவிப்பாரென தெரிவித்துள்ளார், மேலும் இச்சந்தர்ப்பத்தில் மேற்படி தீர்மானங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையினரும் தனியார் துறையினரும் தமது பூரண ஒத்துழைப்பினையும் இணக்கப்பட்டினையும் தெரிவித்தமைக்காக அமைச்சர் அவர்கள் தனது விசேட நன்றிகளை தெரிவித்ததோடு, விபத்துக்களற்ற மாகாணமாக வடமாகாணத்தினை கட்டியெழுப்புவதர்க்கு பொதுமக்கள் உட்பட அனைத்து சேவை வழங்குனர்களும் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு அமைச்சர் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Leave a comment