வடமராட்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கைதுசெய்யப்பட்ட காவல்துறையினர் தற்காலிக பணி நிறுத்தம்

243 0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பாரவூர்தி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு காவல்துறையினரும் தற்காலிகமாக பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு – மணல் காடு பிரதேசத்தில் உத்தரவை மீறி சென்ற பாரவூர்தி மீது நேற்று காவற்துறையினர் துப்பாக்கி சூடு நாடத்தினர்.

இந்த சம்பவத்தில் 24 வயதுடைய ஒருவர் பலியானார்.

சட்டவிரோதமான முறையில் அகழ்ப்பட்ட மணலை கொண்டு செல்லும் வழியில் காவல்துறையினரின் உத்தரவை மீறி பாரவூர்தி பயணித்தமையை அடுத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறையினர் தெவிக்கின்றனர்.

இதேவேளை இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேம்படி – துன்னாலைக்கும் கலிகை சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

மேலும் பருத்தித்துறை – கொடிகாமம் சாலை ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் கொல்லப்பட்ட துன்னாலை மேற்கைச் சேர்ந்த 24 வயதான இளைஞரின் சடலம் இன்னும் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக கூறப்படும் பருத்தித்துறை காவற்துறை நிலையத்தின் காவற்துறை பரிசோதகரது, நெல்லியடியில் உள்ள வீட்டிற்கு நேற்று இரவு அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முகத்தை மூடியபடி உந்துருளியில் வந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக காவற்துறை மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு சம்பவ இடத்துக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment