காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு களவாடிய முன்னாள் இராணுவத் தளபதி உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை

349 0

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்து இரும்பு பொருட்கள் அகற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

பாரிய ஊழல்மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

இதற்காக, முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, மேஜர் ஜெனரல் உதய எனஸ்லி பெரேரா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் இணை செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி ஆகியோரை எதிர்வரும் 13ம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2012ஆம் மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் காங்கேசந்துறையில் வெளிப்புறங்களில் உள்ள இரும்புகளை திரட்டுவதாக கூறி, குறித்த சீமெந்து தொழிற்சாலையில் இருந்து 600 மெட்ரிக் தொன் எடைகொண்ட இரும்பு பொருட்கள் இராணுவத்தால் ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன் ஊடாக அரசாங்கத்துக்கு பல கோடி ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அது குறித்தே விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment