பிரபல ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிக்கு மரண தண்டனை!

315 0

பிரபல ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளியாக இனங்காணப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மெல் குணசேகர தனது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில், தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த துருலாந்தி அன்தனி ரம்சான் ஜோர்ஜ் என்பவருக்கு எதிராக, ஆயுதத்துடன் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தமை, கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டமை மற்றும் கொலை செய்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

சம்பந்தப்பட்ட வீட்டுக்கு நிறம் பூசும் பணிகளில் ஈடுபட்டிருந்த குறித்த நபர், மெல் குணசேகரவின் தாய், தந்தை, சகோதரர் அனைவரும் சமய வழிபாட்டுக்காக வௌியே சென்றிருந்தமையை அறிந்து, கொள்ளையிட முயற்சித்துள்ளார்.

எனினும், எதிர்பாராத விதமாக ஊடகவியலாளர் மெல் குணசேகர வீட்டில் இருந்த காரணத்தினால், அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக, இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளார்.

Leave a comment