உத்தரபிரதேச மாநிலத்தில் குடும்ப வறுமை காரணமாக அரசின் இழப்பீடு தொகை பெறுவதற்காக புலிக்கு முதியவர்களை இரையாக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பிலிபித் புலிகள் சரணாலயம் உள்ளது.அடர்ந்த காடு நிறைந்த இந்த பகுதியில் புலிகள் தாக்கி முதியவர்கள் இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
கடந்த 5 மாதங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். புலிகள் தாக்கி உயிர் இழப்பவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.புலிதாக்கி அடிக்கடி முதியவர்கள் உயிர் இழக்கும் சம்பவங்கள் தொடர்பாக வனவிலங்கு குற்றத்தடுப்பு அமைப்பின் அதிகாரி கலீல் அத்தர் பிலிபித் புலிகள் சரணாலயத்தை ஒட்டிய பகுதியில் ஆய்வு நடத்தினார். அவர் தனது ஆய்வு அறிக்கையை உயர் அதிகாரியிடம் சமர்ப்பித்துள்ளார்.
புலிகள் சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசின் இழப்பீடு பெறுவதற்காக தங்கள் குடும்பத்தை சேர்ந்த முதியவர்களை புலிக்கு இரையாக்குவதாக அந்த அறிக்கையில் பரபரப்பு தகவல் கூறப்பட்டுள்ளது.
புலிகள் தாக்கி இறப்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. வனப்பகுதிக்குள் புலி தாக்கி யாராவது இறந்தால் இழப்பீடு கிடைக்காது.
எனவே கிராம மக்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள முதியவர்களை சரணாலயத்தில் உள்ள காட்டுப் பகுதிக்குள் அனுப்பி வைக்கிறார்கள். புலியால் தாக்கப்பட்டு இறந்தவர்களின் மீதமுள்ள உடலை எடுத்து வந்து கிராமப் பகுதியில் போட்டு விடுகிறார்கள்.
பின்னர் இரை தேடி ஊருக்குள் வந்த புலி முதியவரை தாக்கி கொன்று விட்டதாக அதிகாரிகளிடம் கூறி இழப்பீடு பெறுகிறார்கள்.
குடும்ப வறுமையால் இது போன்ற செயலில் கிராம மக்கள் ஈடுபடுகிறார்கள். முதியவர்களும் அதற்கு சம்மதிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி இரை தேடி கிராமத்துக்கு வந்த புலி தாக்கியதில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்ததாக அவரது உறவினர்கள் வனத்துறை அதிகாரியிடம் தெரிவித்தனர்.
வனப்பாதுகாவலர் வி.கே.சிங் அதை ஏற்க மறுத்தார். வனப்பகுதிக்குள்தான் அந்த பெண் பலியானதாகவும், அவரது உடலை கிராமப் பகுதிக்குள் எடுத்து வந்து போட்டிருப்பதாகவும் கூறினார்.

