பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை

397 0

201608061011101468_life-sentence-in-adulteration-milk-idea-of-Supreme-Court_SECVPFமத்திய அரசும், மற்ற மாநிலங்களும் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரலாம் என சுப்ரீம் கோர்ட்டு யோசனை கூறி உள்ளது.

பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்று பல மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதிகள் ஆர்.பானுமதி, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.பின்னர் நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவில் கூறியதாவது-

பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில்தான் தற்போது சட்டம் உள்ளது. அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

குழந்தைகள், சிறுவர்களின் முக்கிய உணவாக பால் இருக்கிறது. அதில் செயற்கை பவுடர்கள், ரசாயனங்கள் கலந்து விற்பனை செய்வது உயிர் மற்றும் உடல் சுகாதாரத்துக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. இது எதிர்கால சந்ததியினரை மிகவும் பாதிக்கும்.

எனவே பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சட்டத்திருத்தம் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களை பின்பற்றி மத்திய அரசும், மற்ற மாநிலங்களும் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரலாம்.

கலப்பட பால் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து நாடு முழுவதும் மத்திய அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பால் கலப்படத்தை எளிதில் கண்டறியும் வழி முறைகளையும் மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.