பாகிஸ்தான் ஆயில் டேங்கர் லாரி தீவிபத்தில் பலி 200-ஐ நெருங்குகிறது

241 0

பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரி தீப்பற்றிய விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ நெருங்கியது. இதுதொடர்பாக 6 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி கடந்த 25-ம் தேதி பெட்ரோல் டேங்கர் லாரி, பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் நகர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரியிலிருந்து சிந்தி சாலையில் ஓடிய பெட்ரோலை பிடிக்க சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள்  சூழ்ந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்ததில், பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் என 100க்கும் அதிகமானோர் அங்கேயே உடல் கருகி பலியாகினர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், லாகூர், முல்தான் மற்றும் பைசாலாபாத் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 குழந்தைகள் உள்பட 19 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதையடுத்து தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக டி.எஸ்.பி உள்பட 6 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

பஞ்சாப் மாகாண முதல் மந்திரி ஷாபாஸ் ஷெரிப் கூறுகையில், இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Leave a comment