லெபனான்: அகதிகள் முகாம் மீது தற்கொலைப் படையினர் தாக்குதல்!

474 0

லெபனான் நாட்டின் கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையோரம் உள்ள அகதிகள் முகாமில் தற்கொலைப் படையை சேர்ந்த 5 பேர் நடத்திய மனிதகுண்டு தாக்குதலில் ஒரு இளம்பெண் உயிரிழந்தார். ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

லெபனான் நாட்டின் கிழக்கு பகுதியில் சிரியா நாட்டின் எல்லையோரத்தில் உள்ள அர்சலான் என்ற இடத்தின் அருகேயுள்ள உள்ள அல்-நவுர் அகதிகள் முகாமில் சிரியா உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி வந்த பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் சிரியாவில் இருந்து தப்பிவந்த ஐ.எஸ். தீவிரவாதிகளும் சிரியாவை சேர்ந்த போராளி குழுவினரும் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை வேட்டையாடும் பணியில் லெபனான் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அல்-நவுர் அகதிகள் முகாமுக்குள் பதுங்கியிருந்த நான்கு தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடல்களில் கட்டியிருந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

மேலும் சில தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி ஆவேசமாக தாக்கினர். அருகாமையில் உள்ள அல்-குவரியே அகதிகள் முகாமிலும்  ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல் நடத்தினான். இதில் சிரியாவில் இருந்து அகதியாக வந்து பெற்றோருடன் அந்த முகாமில் தங்கியிருந்த ஒரு இளம்பெண் உடல் சிதறி உயிரிழந்தார். தேடுதல் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் ஏழுபேர் படுகாயமடைந்தனர்.

Leave a comment