அரசியல் தீர்வுக்கு தென்னிலங்கை மக்கள்தொடர்ந்தும் எதிர்ப்பு

319 0

dad1-450x225நல்லிணக்கம், நிலைமாறு நீதிப்பொறிமுறைமற்றும் சிறுபான்மையினருக்கான தீர்வுகளை வழங்குவது தொடர்பிலான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தென்பகுதியிலுள்ள சிங்கள மக்கள் தொடர்ந்தும் எதிரான நிலைப்பாட்டிலேயே இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நடாத்திய கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்தத் தகவலைத் தெரிவித்ததாக அந்த சந்திப்பில் கலந்துகொண்ட மனித உரிமை செயற்பாட்டாளரான பிரிட்டோ பெர்ணாண்டோ  தெரிவித்தார்.

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது அரச சார்பற்ற நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு வழி செய்யும் வகையிலான புதிய சட்டமூலத்திற்கு உள்ளடக்க எதிர்பார்க்கும் விடயங்கள் குறித்து அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியதாக காணாமல் போனோரின் குடும்பங்களை ஒன்றிணைப்பதற்கான அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்ணாண்டோ கூறியுள்ளார்

அத்துடன் மாவட்ட அபிவிருத்து குழுக்களிலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதியொருவரை இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும் இதன்போது பிரதமர் தெரிவித்ததாக பிரிட்டோ தெரிவித்ததார்.

நல்லிணக்கம், நிலைமாறு நீதிப்பொறிமுறை, சிறுபான்மையினருடனான சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் உள்ளிட்ட ஏனைய சில விடயங்கள் குறித்து அரச சார்பற்ற நிறுவனங்களால் பிரதமரிடம் கேள்வி எழுப்பட்டதாக கூறிய பிரிட்டோ பெர்ணாண்டோ, இதன்போது இவ்வாறான விடயங்களுக்கு தென் பகுதியில் இருந்து அரசியல் அழுத்தம் உள்ளதாகவும் கூறியதாகத் தெரிவித்தார்.

அதேவேளை தென்பகுதியிலுள்ள அரசியல்வாதிகள் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்கான அரசியல் ரீதியான விருப்பமும் தெரிவிக்கப்படவில்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிலைமாறு நீதிப்பொறிமுறை, நல்லிணக்க பொறிமுறைகளை நிறைவு செய்தல் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டதாகவும் பிரிட்டோ பெர்ணாண்டோ மேலும் தெரிவித்தார்.