தமிழர் தொன்மங்கள் மீதும் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாய்ந்தமை இனவழிப்பின் தொடர்ச்சி – சிறீதரன்

841 0
கடந்த வாரம் கிளிநொச்சி நகரில் கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பெற்ற திருவள்ளுவர் சிலை பொருத்தப்பட்டிருந்த பூகோள உருவில் பொறிக்கப்பட்டிருந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரது எச்சரிக்கையின் காரணமாக நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கின்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகிற்கு இந்த தேசத்தின் தமிழறிஞன் திருவள்ளுவரை எமது மண்ணில் சிலை நிறுவி நினைவு கொள்ள முடியாத அடிமைத்தனத்திற்குள் இன்றும் தமிழர் தேசம் மூழ்கிக் கிடப்பதை நினைவூட்டுவதாகவே இச்சம்பவம் அமைகின்றது.
கடந்த 2009 இல் இனப்படுகொலையொன்றை திட்டமிட்ட முறையில் மேற்கொண்ட அரசு போருக்குப் பின்னர் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை உலகம் அவதானிக்க வேண்டும். தமிழர் இராச்சியத்தின் அடையாளமாகத் திகழும் சோழத்தமிழரசின் கொடியில் மிளிர்ந்த புலிச்சின்னத்தை கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத்தின் இலச்சினையிலிருந்து நீக்குமாறு 2012 இல் இதே பயங்கரவாதப் பிரிவு எச்சரித்து நீக்கச் செய்திருந்தது. தமிழர் சாம்ராட்சியம் நிலவியபோது இலங்கைத் தேசத்தின் சிறப்புப் பெயர்களில் ஒன்றாக விளங்கிய ஈழம் என்ற சொல்லை நீக்குமாறு தமிழ்ச் சங்கத்திற்கும் அரச அதிகாரிகளுக்கும் கடுமையான எச்சரிக்கைகளையும் அழுத்தத்தையும் பயங்கரவாதப் பிரிவு விடுத்து அப்பெயரை நீக்கச் செய்துள்ளது.
திருமூலரால் ஈழம் எனச் சிறப்பிக்கப்பட்டது இலங்கை தேசம். பிறநாட்டவர்கள் இலங்கையை தமது ஆளுகைக்குள் வைத்திருந்தபோது செரண்டிப், தப்ரபேன், சிலோன் போன்ற பெயர்களால் இலங்கையை அழைத்தார்கள் என்பது வரலாறு. அதுபோலவே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இருந்த இந்துமத மற்றும் கலாசாரத் தொடர்புகள் காரணமாக திருமூலர் இலங்கையை ஈழம் என விளித்தார்.
இலங்கை அரசினுடைய அரசினர் பாடத்திட்டத்தின் பிரகாரம் ”ஈழம் எங்கள் நாடெடா அது இன்பமான வீடெடா..” எனவும் ஈழத்து ”ஈச்சரங்கள் எவை” எனவும் வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் நாங்கள் படித்திருக்கிறோம். ஈழம் என்ற சொல் பல இடங்களில் இலங்கையைக் குறிக்கிறது என வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன் இலங்கையின் தேசிய கீதத்தில் ”ஈழசிரோன் மணி வாழ்வுறு பூமணி நமோ நமோ தாயே…” என நிலைகொண்டுள்ள இலங்கையின் ஈழம் எனும் நாமத்தை அழிக்கக் கட்டளையிட்டமை தமிழ் மக்களின் வன்மையான கண்டனத்திற்குரியதாகும். வரலாற்றின் தெளிந்த பார்வையின்றி ஈழத்தமிழ் மக்களின் தொன்மங்கள் மீதும் அவர்தம் அடையாளங்கள் மீதும் குறிவைத்துத் தாக்கி தமிழரை இனவழிப்புச் செய்கின்ற சிங்கள அரச மூலோபாயத்தின் கருவிகளாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் இலங்கையில் இனங்களுக்கிடையே ஒருபோதும் நல்லிணக்கம் நடைபெறப்போவதில்லை என்ற செய்தி துல்லியமாக வெளிப்பட்டு நிற்கின்றது.
எனவே இவ்விடயத்தில் சகவாழ்வுத்துறை அமைச்சு நல்லிணக்கச் செயலணி இலங்கையின் அதிஉத்தம ஜனாதிபதி ஆகியோர் இவ்விடயங்களில் விரைந்து நடவடிக்கை எடுத்து ஈழம் என்னும் சொல் மீண்டும் அதே இடத்தில் பொறிக்கப்படுவதற்கும் வரலாற்று அறிவற்று இனமுரண்பாட்டை கூர்மையடையச் செய்தமைக்காக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மீது தகுந்த, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.

Leave a comment