தமிழ் பண்பாட்டை நாம் இழந்துவிடக்கூடாது – சிறீதரன்

404 0
எமது தமிழ் பண்பாட்டை தமிழர்களாகிய நாம் இழந்துவிடக்கூடாது, எமது பண்பாட்டை, மொழியை, கலாசாரத்தை நாம் இழப்போமாகவிருந்தால் தமிழர்களாக இந்த மண்ணில் நாம் வாழமுடியாது என யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா நிகழ்வுகளின் இரண்டாம் நாள் நிகழ்வுகளின் மாலை நிகழ்வுகள் நேற்று (25) மாலை 4.00 மணிக்கு நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்றன.
அவர் தனது தலைமை உரையில் மேலும் கூறுகையில்,
தமிழை வளர்ப்பதற்காக கம்பன் கழகம் ஆற்றிவருகின்ற பணி மிகப் பெரியது, பெறுமதியானது. கம்பன் கழகத்தை இயக்கிச் செல்கின்ற கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களது அரும்பெரும் பணி காலத்தால் போற்றப்பட்டு நிலைத்து நீடித்திருக்கக் கூடியது. இப்பணி எமது மொழியை, எமது பண்பாட்டை, எமது கலாசாரத்தை பேணுவதற்கு எமது வரலாற்றை வெளிப்படுத்தி எமது தமிழ் இனத்தின் நிலைத்திருப்புக்கு மிக முக்கியமானதாகும்.
மதிப்புக்குரிய கம்பவாரிதி அவர்கள் எமது நாட்டிலும் நாடு கடந்தும் தமிழ் வளர்ப்பதில் அரும்பணியாற்றி வருகின்றார். அவரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்களும் அவர் வழி தொடர்கின்றார்கள். எமது தமிழ் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டிய இக்கட்டான நிலையில் நாம் இன்று உள்ளோம்.
ஈழம் என்ற சொல்லைக்கூட விரோதமாகப் பார்க்கின்ற காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எமது மொழியை பண்பாட்டை சிதைத்தழித்து எமது இனத்தை அழிப்பதற்கான பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனையெல்லாம் எதிர்கொண்டுதான் எமது தமிழ் மொழியை தமிழ் பண்பாட்டை கட்டிக்காக்க வேண்டியவர்களாக நாம் காணப்படுகின்றோம்.
பல சவால்களுக்கு மத்தியிலும் எமது தமிழ் பண்பாட்டை, தமிழ் மொழியை கட்டிக்காத்து வளர்ப்பதில் கம்பன் கழகம் காலக் கடமையேற்று ஆற்றி வருகின்ற இப்பணி மிகவும் பெறுமதியான மிக முக்கியமானதொன்றாகும். இப்பணி தொடர என்றென்றும் நாம் துணையிருப்போம். என்றார்.
இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், இலங்கை, இந்தியா நாட்டைச் சேர்ந்த தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், கம்பன் கழக உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பெருமளவானோர் கலந்துனொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வுகளில் இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள் மேடையில் தோன்றி தற்கால வாழ்வியல் முறை, அரசியல் ஆட்சி முறை போன்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்ட நாடகமும் மிகவும் சிறந்த முறையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment