மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஸ்வீடன் நாட்டவர் 6 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

218 0

மாலியில் அல் கொய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஸ்வீடன் நாட்டவர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆப்பிரிக்க நாடான மாலியின் டிம்பக்டுவில் கடந்த 2011-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜோஹன் கஸ்டாஃப்சன் தென்ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அல் கொய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க 5 மில்லியன் டாலர் பிணைத்தொகையாக தரவேண்டும் என்று தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஸ்வீடன் அரசு நிராகரித்தது. இந்நிலையில் ஜோஹன் கஸ்டாஃப்சன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜோஹன் கஸ்டாஃப்சன் விடுவிக்கப்பட்டது குறித்து ஸ்வீடன் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மார்காட் வால்ஸ்ட்ரோம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘2011-ம் ஆண்டு மாலி நாட்டின் டிம்பக்டுவில் கடத்தப்பட்ட ஜோஹன் குஸ்டாஃப்சன் என்பவரை அல் கொய்தா இயக்கத்தினர் விடுதலை செய்துவிட்டனர். இவர் விரைவில் ஸ்வீடன் திரும்புவார்’’ என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், பிணைத்தொகை கொடுத்து அவர் மீட்கப்பட்டாரா? என்ற கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் பதில் கூற மறுத்துவிட்டது.

Leave a comment