பெண் கைதி மர்மச்சாவில் திடீர் திருப்பம்: மும்பை சிறை அதிகாரிகள் 6 பேர் மீது கொலை வழக்கு

252 0

மும்பை பைகுல்லா சிறையில் பெண் கைதி மர்மச்சாவு அடைந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக சிறை அதிகாரிகள் 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீபா என்கிற மஞ்சுளா என்ற பெண் கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரை சிறை அதிகாரிகள் அடித்து கொன்று விட்டதாக மற்ற பெண் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறை கட்டிடத்தின் மேற்கூரையில் ஏறி கோஷமிட்டனர்.

சிறை வளாகத்தில் உள்ள பொருட்களை சூறையாடியும், ஆவணங்களை எரித்தும் வன்முறையில் ஈடுபட்டனர். சிறை காவலர்களுடன் பயங்கர மோதலிலும் ஈடுபட்டனர்.இதன் காரணமாக பைகுல்லா சிறையில் பெரும் பதற்றம் நிலவியது. பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி மற்றும் சிறை காவலர்கள் உள்பட 12 பேர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.சம்பவத்தன்று பெண் கைதி சிறைக்காவலர் ஒருவருடன் கடும் வாக்குவாதம் செய்தாராம். எனவே அவரை சிறை அதிகாரிகள் 2 மணி நேரம் சரமாரியாக அடித்து உதைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில், நிலைகுலைந்து பேச்சு மூச்சு இன்றி அந்த பெண் கைதி விழுந்ததன் காரணமாக அவரை மீட்டு ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அவர் இறந்து விட்டது தெரியவந்தது. சிறையில் பெண் கைதி மர்ம மரணம் தொடர்பாக நாக்பாடா போலீசார் விசாரணை நடத்தினார்கள்.இதில், சிறை அதிகாரிகள் பெண் கைதியை உடல் ரீதியாக சித்ரவதை செய்தது தெரியவந்து இருக்கிறது. இதையடுத்து, இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பெண் கைதியை தாக்கிய சிறை அதிகாரிகள் 6 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பைகுல்லா பெண்கள் சிறையில் தான் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள அவரது தாயும், தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் நிர்வாகியுமான இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டு உள்ளார்.

பெண் கைதி மர்ம மரணம் பற்றி அறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதிகளில் இந்திராணி முகர்ஜியும் அடங்குவார். பெண் கைதிகள் போராட்டத்தை தூண்டியதாக சிறை அதிகாரிகள் அவர் மீது குற்றம் சுமத்தி உள்ளனர். சிறையில் நடந்த வன்முறை சம்பவத்தில் அவருக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் தெரிவித்தனர்.இதையடுத்து இந்திராணி முகர்ஜி உள்பட அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பெண் கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a comment